பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

ஆகுமென்றும், அவர்களின் பின் பக்கமாக நின்றுபேசவேண்டுமென்றும் உமாருக்கும் எச்ரிக்கை செய்தார். ஆனால், அவர்கள் அங்கே கருணை உள்ளத்தோடு வரவில்லை.

உமார் எதுவும் பேசக் கூடியவனாக இல்லை. யாரோ நடத்துகிற விருந்தில் கலந்து கொள்ள வந்த ஒருவனாகவே அவன் அங்கு நடமாடினான். வெளியிலே குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டதும் எல்லோருடைய கண்களும் தலைவாசல் புறம் திரும்பின. சுல்தான் வருவதை அறிந்ததும் உமாருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

அவர் குதிரையிலிருந்து இறங்கியதும் வேலைக்காரர்கள் அவசர அவசரமாக அரசர் எதிரில் ஒரு நடைவிரிப்பை விரித்தார்கள். தன்னுடைய வேட்டையாடும ஈட்டியை அருகில் இருந்த அடிமை ஒருவனிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கிய சுல்தான் மாலிக்ஷா உள்ளே வந்தார். அவர் உடல் முழுவதும் தூசி படிந்திருந்தது. களைப்பாக இருந்தாலும் அவர் களிப்பாக இருந்தார். இருப்பினும், இந்த நிசாமையும் வயது முதிர்ந்த முல்லாக்களையும் பார்க்க நேர்ந்ததில் அவர் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார் என்றே உமார் நினைத்தான். ஒரு மிருகம் நடப்பதுபோல் நடந்து வந்த மாலிக்ஷா தாம் பேசும்போது கைகளை அசைக்கவும் இல்லை. குரலை உயர்த்தவும் இல்லை.

அவருக்கு வணக்கம் கூறுவதற்காக நிசாம் உமாரை அழைத்து வந்தபோது, சுல்தான் அவனை உற்றுநோக்கிவிட்டு, ‘ஆம்! இவனேதான்!” என்று மெல்லிய குரலில் கூறினார்.

“இந்த உலகத்தையாளும் இறைவரே! தங்களின் வேலைக்காரன் நான்” என்று கூறி உமார் அடி வணங்கினான்.

“கொராசன் பாதையிலே, நான் தங்கியிருந்த இடத்திற்கு நீ வந்தாய்! என்னைப் பற்றிய ஒரு குறி கூறினாய். நீ கூறியபடி அது நிறைவேறி விட்டது. அதை நான் மறக்க வில்லை; என்றும் மறக்கவும் முடியாது. இப்பொழுது நீ என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்!” என்று அவனை சுல்தான் மாலிக்ஷா கேட்டார்.

“அரசே! தங்கள் பணியாளாக என்னை அமர்த்திக் கொள்ளும்படி வேண்டுகிறேன்!” என்றான் உமார்.