பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

பேசுகின்றாற்போல இல்லை. பெரியமுல்லா அவர்களிடம் சென்று மரியாதை செலுத்தி விடைபெற்றுக் கொண்டு குதிரையேறப் போனார். குதிரையில் ஏறி உட்கார்ந்ததும் உமாரை அருகில் அழைத்து, “அரசாங்க வானநூல் கலைஞராக உன்னையேற்றுக் கொள்ளும்படி அமைச்சர் நிசாம் வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஆணையிட்டிருக்கிறேன். நாளைக் கூடும் சபையில், உனக்கு அரசாங்க மரியாதையுடன் பதவி வழங்கப்படும். அடிக்கடி சபைக்குவா. என் அருகில் அடிக்கடி வந்து இரு. உண்மையான குறிகளை அவ்வப்பொழுது உணர்ந்து கொள்வதற்கு நீ என் அருகில் இருப்பது இன்றியமையாதது” என்று கூறிவிட்டு, கடிவாளத்தை ஒரு சுண்டு சுண்டிக் குதிரையைத் தட்டிவிட்டார். அவருடன் கூடவந்த, அலுவலர்களும், வேலையாட்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். குதிரையின் காலடி கிளப்பிய தூசியிலே அவர்கள் மறைந்து சென்றார்கள். ஆனால் நிசாம்தான் மனம் வருந்தினார்!

மறுநாள் நிசாம் உமாரைத் தனியாகச் சந்தித்தபோது, “நேற்று நீ மோசமாக நடந்து கொண்டாய். உலேமா முல்லாக்களுடன் இவ்வாறு எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது. உன்னுடைய பாதையில் அவர்கள் அடிக்கடி தடையெழுப்புவதற்கு வாய்ப்பளித்து விட்டாயே!” என்று வருந்தினார்.

“தந்தையே! என் வேலைக்கும் உலேமாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என்று உமார் கேட்டான்.

“அவர்களுடைய ஆதரவில்லாத எந்தக் காரியமும் வெற்றிபெற முடியாது. நீ தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இப்பொழுது, அரச சபையில் நீ பதவியேற்கப் போகிறாய். வருடத்திற்குப் பனிரெண்டாயிரம் மிஸ்கல் நாணயங்கள்-வரியைக் கழிக்காமல் உனக்குச் சம்பளமாகக் கிடைக்கும். மாலிக்ஷா பிரியப்படுகிற போதெல்லாம் உனக்குப் பொன்னாக வாரிக் கொட்டுவார். அந்த வரும்படி வேறு கிடைக்கும்” என்று நிசாம் சொல்லிக்கொண்டு வரும்போதே உமார் அதிசயித்தான். இத்தனை பெரிய தொகையை அவன் எண்ணிக் கூடப் பார்த்ததேயில்லை.

“அவருடைய ஆதரவு உனக்கு இருக்கும்வரையிலே, வெகுமதிகளும் பரிசுகளும் விரும்பியபோதெல்லாம்