பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

சுல்தான் மாலிக்ஷா அவர்களுக்கு உண்மையாகவே உழைக்கிறேன். என் உழைப்பின் பயனாகப் புதியதொரு சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைக்கப் பாடுபடுகிறேன். ஆகவேதான், அரசியல் கொள்கை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்போது மட்டும் நீ என்னைக் கலந்து கொள்ள வேண்டும் என்கிறேன், புரிகிறதா?” என்று கேட்டார் நிசாம்.

“அப்படியே!” என்று உமார் ஒப்புக் கொண்டான். கண்டிப்பு நிறைந்த இந்த மனிதருடைய முழு நம்பிக்கைக்குரியவனாகத் தான் மாறி விட்டதையுணர்ந்தான். தன்னைக் காட்டிலும், சுல்தான் மாலிக்ஷாவைக் காட்டிலும் இன்னும் சொல்லப் போனால் மதத் தலைவர்களான உலேமா சபையினரில் யாரையும் காட்டிலும் அறிவாளியான இவருடைய நம்பிக்கைக்குரியவனாகத் தான் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான். நிசாமும், தன்னுடைய நெடுநாளைய திட்டம், நிறைவேறியதையெண்ணி மகிழ்ந்தார்.

உமாரின் ஒப்புதல் கிடைத்த மகிழ்ச்சியில், நிசாம் டுன்டுஷ் பக்கம் திரும்பி, “இவனுடைய செல்வாக்கைக் கொண்டு நாம் மாலிக்ஷாவை வசப்படுத்திக் கொள்ளலாம்” என்றான். ஆனால், உமார் அடுத்துக் கூறிய விஷயம் அவருடைய மனக்கோட்டையைத் தகர்த்தது.

“இப்பொழுது ஒரு வருட காலத்திற்கு நான் இங்கே யிருக்கத் தேவையில்லை. ஏனெனில் தினந்தோறும், கால அளவைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டிய வேலைதான். அதைப் பேராசிரியர் மைமனும், மற்றவர்களும் கவனித்துக் கொள்ளுவார்கள். இந்த இடைக் காலத்தில், படையெடுத்துச் செல்லும் சுல்தான் மாலிக்ஷாவுடன், நான் மேற்குத் திசையிலே ஒரு பயணம் போய் வரப்போகிறேன். சுல்தானும், தன்னுடன் வரவேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.” என்று வான சாஸ்திரியான உமார் பதில் உரைத்தான்.

உண்மையில் உமார்தான் சுல்தான் மாலிக்ஷாவுக்கு மேற்றிசைப் படையெடுப்புப் பற்றிய எண்ணத்தை உண்டாக்கினான். ஏனெனில், மேற்றிசையில் பயணம் செல்லும் சாக்கில் தன் அன்புக்குரியவளான யாஸ்மியைத் தேடிப்