பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

“சரி, எழுந்து போய், அந்த ஆட்டக்கார நாயைத் தேடிப் பிடித்து, வயிறு நிறையும் வரை வாயிலே மணலைக் கொட்டி நிரப்பு. நம் அறிவுலக மேதையை அவமதித்த குற்றத்திற்கு அதுதான் தண்டணை” என்றான். அரசர் ஆணையை நிறைவேற்றச் சில ஏவலர் வெளியில் சென்றார்கள்.

உமார் தப்பினான். அவன் வாயிலே எல்லா நாணயத்தையும் திணிக்காமல், பெட்டியோடு கொடுத்தார்கள். விடைபெற்றுக் கொண்டு உமார் வெளியேறினான். அடிமையொருவன், பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவன் கூடப் போனான்.

வழியிலே ஒரே கூட்டமாக இருந்தது. சிப்பாய்கள் இரண்டு பேர் பிடியிலே சிக்கித் துடித்துக் கொண்டிருந்தான் ஆட்டக்காரன். மூன்றாவது ஆள் வாளால் அவன் வாயைக் கிழித்து, சாக்கு மணலை அதில் சாய்த்துக் கொண்டிருந்தான். பாவம்! அவன் அழுகுரலைக் கேட்டுக் கொண்டே உமார் அங்கிருந்து தன் கூடாரம் சென்றான்.


20. நள்ளிருளில் ஒருவன் நட்பு வேண்டுமென்றான்!

அன்று இரவு உமார் வெகுநேரம் வரை தன் புத்தகங்களிலேயே ஆழ்ந்திருந்தான். தன்னுடன், பணப்பெட்டி தூக்கிக்கொண்டு கூட வந்த அந்தக் கரிய அடிமை வழக்கம்போலத் தூங்கவில்லை என்பதைக் கவனித்தான். அவன் முணுமுணுத்துக்கொண்டே முடங்கிக் கிடந்தான். இரண்டாவது நிழலுருவம் ஒன்று அந்த அடிமையின் அருகிலே வந்ததும், இரண்டு பேரும் மெல்லிய குரலிலே பேசிக்கொண்டிருந்தார்கள். உமாருக்கு அதன் பிறகு வேலை ஒடவில்லை. தன் இருக்கையிலிருந்து எழுந்தான். அதைக் கண்ட அந்த அடிமை.

“யா! சூலாஜா அவர்களே! இன்றைய இரவு, பெரிய மாயத்தன்மையுடையதாக இருக்கிறது. தங்கள் அடிமை நாய் அச்சங் கொள்கிறது” என்றான்.

மற்றொருவன், “தயவுசெய்து, தங்கள் காலடியின் அருகிலேயே எங்களையமர்ந்திருக்க அனுமதியுங்கள். இரவு எங்களைப் பயமுறுத்துகிறது.” என்றான்.