பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

எரிந்துகொண்டிருந்த விளக்கின் அருகிலே நகர்ந்து வந்து, அந்தப் புதிய வேலைக்காரன் சொல்லத் தொடங்கினான். கடைத் தொழுகைக்குப் பிறகு அவன் பாழடைந்து கிடந்த இடங்களின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தானாம். ஒரு மேட்டின் மீது பெரும் வெளிச்சமாயிருந்ததாம். அது நிலவின் வெளிச்சம் அல்ல. ஏனெனில் நிலவு அன்று கிடையாது அமாவாசை அந்த வெளிச்ச வட்டத்தின் மத்தியிலே ஒரு மனித உருவம் தோன்றியது அருகில் நெருங்கிப் பார்த்தபொழுது வேறு இரு உருவங்கள் தெரிந்தன.

அரை நிர்வாணமாக இருந்த ஒரு மனித உடல், நெளியும் பாம்பைப் போல் தரையில் நகர்ந்து கொண்டிருந்தது. பழுப்பு நிறமுடைய பெரிய கழுகு ஒன்று அந்த ஒளி வட்டத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே, வந்ததாம். இவ்வாறு அவன் சொல்லி வரும்பொழுதே, அதைக் கண்ணால் பாராத அந்த அடிமை தொடர்ந்து சொல்லத் தொடங்கினான். நேரே அவன் பார்க்காவிட்டாலும், அந்தப் புதிய வேலைக்காரன் ஏற்கெனவே கூறியதை அவன் திருப்பிச் சொன்னான்.

“அந்தப் பெரிய மேட்டிலே இருந்த அந்த வெள்ளைப் பிசாசு, கழுகுடன் பேசியது. அது பேசிக்கொண்டிருந்த போதே கீழே கிடந்த அரை நிர்வாணஉருவம் ஒரு பாம்பாக மாறிவிட்டது. அங்கே ஒரு கத்தியும் இருந்தது. இது ஓர் அதிசய மாய வித்தையல்லவா? நினைக்கும்போதே பயமாயிருக்கிறது” என்றான் நீக்ரோ அடிமை,

வேலைக்காரன் தொடர்ந்தான்; “நகர்ந்து வந்து கொண்டிருந்ததே உருவம், அதுதான் வயிறு நிறைய மண்ணுண்ட ஆட்டக்காரன். அறிவின் ஆசானே! தங்கள் பெயர் அங்கு பேசப்படுவதையும் கேட்டோம். எத்தனை பெரிய மாயவித்தை அவர்களுடையது? என்றான்.

“எங்கே?

“அதோ அங்கே, அத்தப் பெரிய மணல் மேட்டிலே!”

“ஒரு விளக்கெடுத்துவா. எனக்கு வழிகாட்டு. அங்கே போகவேண்டும்” என்றான் உமார்.