பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

யாரோ, அந்த மணல் மேடுகளின் ஊடே அந்த ஆட்டக் காரனைப் புதைத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு ஏதோ உளறுகிறான் வேலைக்காரன் என்று உமார் எண்ணினான். ஆனால் பயப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு அடிமைகளையும் தன்னோடு ஓர் இரவு முழுவதும் வைத்துக் கொண்டிருக்க உமார் விரும்பவில்லை. அவர்களுக்கு வேலைக்கொடுக்க தீர்மானித்தான். அந்த வேலைக்காரன், உமார் கூறியபடி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு வந்தான். உமார் அவனைப் பின்தொடர்ந்தான். மற்றொரு அடிமை பயத்தால் உடம்பு கிடுகிடுக்க, உமாரையொட்டிய படியே தொடர்ந்து சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு, ஓரிடத்தில் வளைந்து, குட்டிச் சுவர்களின் ஊடாகச் சென்று ஏற்கெனவே ஒரு பெரிய தெருவாக இருந்திருக்க வேண்டிய ஒரு பாதையில் வந்து நின்றார்கள். அங்கே நின்றதும், வேலைக்காரன் தன் கைவிளக்கை ஆட்டினான். அப்படி ஆட்டினால் அது இன்னும் நன்றாக எரியும் என்பதற்காக ஆட்டுபவன் போல் ஆட்டினான்.

“இன்னுங் கொஞ்ச தூரம்தான். சிறிது தூரம் சென்று வலது புறமாகத் திரும்பிப் போக வேண்டியதுதான். நான் இங்கேயே.... நிற்கிறேனே!” என்றான் விளக்கு வைத்திருந்த அந்தப் புதிய வேலைக்காரன். அவன் கையில் இருந்த விளக்கை வாங்கிக் கொண்டு உமார் நடந்தான். அதே சமயத்தில் பின்னால், அந்த இரண்டு வேலைக்காரர்களும் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது. பக்கத்துக்குப் பக்கம் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே அவன் தன்னந்தனியாகச் சென்றான். அவ்வாறு செல்லும்போது தனக்கு நேரே உயரத்தில் மங்கலாக வெளிச்சம் ஒன்று தெரிந்ததைக் கண்டான்.

அந்த வெளிச்சம்! ஏற்கெனவே இருந்த ஒரு கோயிலின் இடிந்த குவியலின் மேல் தெரிந்தது. பகல் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த உமார் இந்தப் பகுதியில் சுற்றியிருந்தபடியால் அதன் உயரப் போவதற்குரிய வழியைத் தேடுவது எளிதாக இருந்தது. அந்தக் குவியலின் உச்சியை அவன் அடைந்தபொழுது ஒரு சுவரின் வெடிப்பின் ஊடாக அந்த வெளிச்சம் வருவதைக் கண்டான். சாதாரண எண்ணெய் விளக்கின் ஒளியைக் காட்டிலும் அந்த வெளிச்சம் மிகுந்த ஒளிப்படைத்ததாயிருந்தது. அந்த ஒளிவட்டத்தின் இடையே