பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

ஹாசானைச் சந்தித்ததைப் பற்றி நினைத்துப் பார்த்துக் கொண்டான். முரண்பட்ட தன்மையுடைய அவன், தான்வருவதை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறான் என்பதை உமார் உணர்ந்துகொண்டான். அந்தப் புதிய வேலைக்காரனை இப்பொழுது காணவில்லை! அவனைக்கொண்டு தன்னை வரவழைக்கச் செய்திருக்கிறான் அந்த ஹாசான். தன்னைச் சோதித்துப் பார்த்திருக்கிறான். அந்த வெளிச்சம் நிச்சயமாகத் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு விளக்கேயாகும்! மான்வேட்டை யாடுபவர்கள்தான் கழுகுகளைப் பழக்கி வைத்திருப்பார்கள். இவன் ஒரு கழுகைப் பழக்கி வைத்திருப்பதன் காரணம் என்ன?

எகிப்தியர்களைப் போல் பாரசீகத்தை உச்சரித்துப் பேசும் ஹாஸான் இபின் சாபா என்பவனைப் பற்றி யாருக்காவது தெரியுமா என்று பலமுறை உமார் கேட்டுப் பார்த்து விட்டான். சுல்தானின் சேனையில் உள்ளவர்கள் யாரும் தெரியவில்லை என்றே கூறினார்கள்.


21. புதிய மதம் பரப்பப் புறப்பட்ட ஒரு கூட்டம்

நிசாம் அல்முல்க் அவர்கள் வெகு தூரத்தில் இருந்து கொண்டே தன்னைக் கண்காணித்து வருவதை உமார் புரிந்து கொண்டான். மறுபடியும், நாடோடிகளான ஆட்டக்காரர்கள் தன் பாதையில் குறுக்கிடவில்லை; குறுக்கிடும்படி விடப்படவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டான். எப்பொழுதும் புன்சிரிப்புடன் கூடிய இந்து மதத்தினனான ஒரு கடிதம் எழுதுபவன், உமார் தன் கூடாரத்தில் தனியாக இருக்கும்பொழுது வந்து சாமர்கண்டிலும், பால்க் நகரிலும் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றியும் வதந்திகளைப் பற்றியும் சுல்தான் மாலிக்ஷா அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் அடிக்கடி சொல்லுவான்.

வாரந்தோறும், நிசாம் அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அவனுக்கு மிகமிகப் பயன்பட்டன. பெரும்பாலும், இந்தக் கடிதங்களில் நிசாம் அவர்களின் வேலைத் திட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தன. வரக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்து, பிறகு கொள்ளப்பட வேண்டிய கொள்கைகளைப்