பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

வாய்ந்ததல்ல இந்தச் சாம்பல் நிறப் பாறை. அதற்கு அடுத்தபடியாகத்தான் கொள்ள வேண்டும். எந்த மதத்திலும் சேராத இரண்டும் கெட்டான்களான அந்த காத்தயானிய வீரர்களும் அவன் கூடவே மண்டியிட்டார்கள். தொழுவதற்குப் பதிலாக அழகிய பளிங்குத் தூண்களையும், தங்கத் தோரணங்களையும் கண்டு வியப்படைந்தார்கள்.

தொழுது முடிந்து உமார் எழுந்திருந்தபோது, மரியாதை பொருந்திய மெல்லிய குரல் ஒன்று அவனுக்கு வாழ்த்துக் கூறியது.

“மோட்சத்தைத் தேடுபவரே; சாந்தியுண்டாகட்டும்! என்று அந்தக் குரல் வாழ்த்தியது.

“சாந்தி, உமக்கும் உண்டாகட்டும் என்று பதிலுக்கு வாழ்த்தினான் உமார். திரும்பிப் பார்த்தால், அவன் அருகிலேயே ஹாஸான் இபின் சாபா என்ற அந்தக் குட்டை மனிதன் நின்றான். அவனுடன் மற்றொருவனும் கூட வந்திருந்தான். ஹாஸான், ஓர் யாத்திரிகனுடைய உடையில் இருந்தான். அரபு மொழியிலே பேசினான். முன் சந்தித்த போது பாரசீக மொழியிலே எவ்வளவு இயற்கையாகப் பேசினானோ அவ்வளவு இயற்கையாகத் தன் சொந்தமொழிபோலவே, இப்பொழுது அரபு மொழியிலே பேசினான்.

அவன் புன்சிரிப்புடன், “அல்லாவின் அருள் நிலைபெறுவதாக! நான் என் நண்பனை மீண்டும் சந்திக்கும்படி கூட்டி வைத்த அல்லாவின் புகழ் நிலைபெறுவதாக!” என்று கூறிவிட்டு, “இந்தப் பாறைக் கோபுரத்தின் உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா? பாறையைத் தவிர வேறு என்ன இருக்கிறது தெரியுமா? என்று கேட்டான். உமார் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான். கூட இருந்தவர்களும் அயர்ந்து போனார்கள்!

சுற்றிலும் இருந்தவர்கள், திரும்பி ஹாசன் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எவரையும், தன் பேச்சினால் கவர்ச்சி செய்யும் சக்தி ஹாஸனுக்கு இருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் நெருங்கி வந்ததும் அவன் சொல்லத் தொடங்கினான். ‘இதோ இந்தச் சாம்பல் நிறக்கல்லிலே ஓர் அடையாளம் காணப்படுகிறதே; இது என்ன தெரியுமா?