பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தீர்க்கதரிசியான முகமது நபியவர்கள் இந்த இடத்திலே நின்றபடிதான் சுவர்க்கத்துக்கு எழும்பிப் போனார். அவருடைய காலடி பதிந்த இடந்தான் இந்த குறி. அப்படி அவர் எழும்பிப் போனபோது, அவர் கூடவே இந்த பாறையும் போய்விடாமல் தடுப்பதற்காக கபீரியல் தேவதை இந்தப் பாறையை அழுத்திப் பிடித்துக் கொண்டது. அதன் கைவிரல்கள் பதிந்த இடங்கள்தாம் இந்தப் பாறையின் விளிம்பிலே உள்ள துவாரங்கள்!” இந்த மாதிரியான அதிசயத் தெய்வீகச் சம்பவங்களை ஹாசன் எடுத்துக் கூறத் தொடங்கியதும், ஆச்சரியத்துடன், நெருங்கி வந்தார்கள் அந்தக் காத்தயானியர்கள்.

“இதன் அடியிலே ஒரு குகையிருக்கிறது. காத்திருக்கும் உயிர் ஆவிகளெல்லாம் தீர்ப்புநாள் அன்று அந்தக் குகையிலேதான் ஒன்று கூடும். என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூறி முன் நடந்தான். அந்த இடம் முழுவதும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவன் போல் அவன் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அங்கிருந்த முல்லா ஒருவரை ஏவிப் பாறையின் அடிப்புறத்தில் உள்ள குகை வழியாக அனைவரையும் அழைத்து வரச் செய்தான். வழியில் சில சில குறியீடுகளைக் காட்டி அவற்றின் தெய்வீகத் தன்மையைப் பற்றி விவரித்தான். அந்த விவரங்களைக் கேட்க, செப்புத் தலைக் கலசமும், தோல் உடைக்கவசமும் அணிந்த வீர்களான காத்தயானியர்கள் பயந்து போனார்கள். ஹாஸானுடன் கூட வந்த அந்தத் தடிமனிதன் உமாரின் காதில், “உலகத்தின் ஆவிகளெல்லாம் தீர்ப்பு நாளன்று ஒன்று கூடும் இடமாக இந்தச் சிறு குகை இருக்குமானால், அத்தனை ஆவிகளும், அணுவினும் சிறியதாக மாறினாலன்றி முடியாது” என்று தன் தெய்வீக அவநம்பிக்கையை எடுத்துரைத்தான்.

புனிதம் நிறைந்த இடமான வட்ட அரங்கத்தின் மேல் ஏறி நின்று கொண்டு தன் கையில் இருந்த மெழுகுவர்த்தியை ஓர் உத்தரத்தின் அருகிலே தூக்கிப் பிடித்தான். “திருத்தூதர் முகமது நபியவர்கள், விண்ணுலகம் ஏறிய பிறகு, நீண்ட நாட்களுக்கு முன் இருந்த இஸ்லாமிய காலிப் ஒருவர் இதில் உள்ள வாக்கியங்களைப் பொன்னால் எழுதி வைக்கும்படி உத்தரவிட்டார். இதோ பாருங்கள்” என்று ஹாஸான் காண்பித்தான். உமாரால் அந்த எழுத்துக்களைச் சரியாகப்