பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146


“ஜெருசலத்தின் கதை இப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சுவர்கள் இடிக்கப்படுவதும், அரசர்களாலும், படைவீரர்களாலும் மக்கள் கொல்லப்படுவதும், வழக்கமாகிவிட்டது. திருத்துதுவர் முகமது நபியின் கடைசிக் காலத்திலே சோஸ்ரேஸ் என்ற பாரசீக நாட்டான் யூதர்களால் துரத்தப்பட்டான். நகர் பாழாகியது. பிறகு ஹெராகளிட்டஸ் என்ற ரோமானியச் சக்ரவர்த்தியின் வாள்வலி யூதர்களிடமிருந்து இந்த நகரைப் பிடித்துக் கொண்டது. யூதர்கள் கிறிஸ்தவர்களால் வெட்டித் தள்ளப்பட்டார்கள். நம்முடைய காலிப் அவர்கள் ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக இந்த நகரைக் கைப்பற்றினார். இரத்தம் சிந்தப்படவில்லை. அங்கே உள்ள புனிதப் பாறையில் படிந்திருந்த பாவக் கறைகளையும், அழுக்குகளையும் நீக்கித் தூய்மைப்படுத்தினார். சோலோமன் டேவிட் ஆகியவர்களின் புனிதமான பாறையைப் புனிதமாகவே வைத்திருந்தார். ஆனால், இப்பொழுது இந்தத் துருக்கியர்கள் அறியாமையால் இரத்தம் சிந்தும்படி செய்துவிட்டார்கள். அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு வாழ முடியாது. விரைவில் இந்த நகரம் புதிய எதிரிகளால் கைப்பற்றிக் கொள்ளப்படும்” என்றான் ஹாஸான்.

“யார் அந்தப் புதிய எதிரிகள்?’ என்று உமார் கேட்டான்.

“அது யாருக்குத் தெரியும்? கண்ணுக்குத் தெரியாத அந்த தெய்வீகத் திரைக்கு அப்பால் இருக்கும் விஷயத்தை நான் எப்படிச் சொல்லிக் காட்ட முடியும்? முஸ்லீம்கள் ஜெருசலத்தை இழப்பார்கள் என்பது மட்டுமே நான் சொல்லுகிறேன். புதிய பயங்கரமான எதிரிகள் யாரோ கைப்பற்றிக் கொள்வார்கள்.”

“கடவுளையும் அவருடைய துதர்களையும் நம்புங்கள். மூன்று கடவுள் இருப்பதாக மொழியாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லதாகும் என்ற இந்தத் திருமொழியின் உண்மையை அறியாதவர்கள் எப்படி இங்கு அமைதியாக வாழ முடியும்” என்று ஹாசான் கேட்டான்.

உமாரின் சிந்தனை வேலை செய்தது. சாம்ராஜ்யமென்னும் ஒரு பெரிய ஆடையை நெய்து கொண்டிருக்கும் நிசாமையும், மாலிக்ஷாவையும் பற்றி நினைத்தான். அவர்கள் இருவரும் எங்கெங்கோ இருக்கிறார்கள். தீக்கிறையாகிக் கருகிய திருமடங்களையும், இறந்துபோன சுற்றத்தாரை எடுத்துப்