பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அக்ரோனோஸ், தன் விரல்களால் தாடியைத் தடவிக் கொண்டே, பேசாமல் இருந்தான்.

உமார், நெருப்புப் பிழம்பாக மாறி மறைந்து கொண்டிருக்கும் கதிர்ப்பந்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஹாஸான், புதுமாதிரியான ஒரு பேச்சைத் தொடக்கிக் கொண்டிந்தான்.

இதுவரை மனித அறிவினால் ஆராய்ந்து காணப்படாத ஒரு புதிய கடவுளைப் பெரிதும் நம்பினான். இதுவரை உண்டான மதங்களெல்லாம், முடிவான ஒரு முடிவை எட்டிப் பிடிக்கப் பயன்பட்ட ஏணிப்படிகளே என்று கூறினான். அந்த மதங்களெல்லாம், மனிதனின் அறிவைக் குறிப்பிட்ட அளவுதாம் ஒளி பெறச் செய்தன என்றும், ஆதம், நோவா, இப்ராகிம், மூசா, இயேசு, முகமது என்ற ஆறு தீர்க்க தரிசிகளும் காட்டாத ஒரு பேருண்மையை, முடிவான அசல் உண்மையைக் காட்ட ஏழாவது தீர்க்கதரிசி ஒருவர் நிச்சயமாகப் பிறந்து வருவார் என்றும் கூறினான்.

“அந்த ஏழாவது தீர்க்க தரிசியை நாம் அறிந்து கொள்ளும் வழி எது?” என்று அக்ரோனோஸ் கேட்டான்.

“அந்தத் தீர்க்கதரிசி தாம் தோன்ற வேண்டிய காலம் வருவதற்கு முன்னும் நம் கூடவேயிருந்து வந்திருக்கிறபடியால், நாம் அவரைத் தெரிந்து கொள்வோம். அலி அவர்களின் இனத்தில் ஏழாவது இமாமாகவும் அலி அவர்களின் ஆவியின் வாரிசுதாரராகவும் அவர் விளங்கியிருக்கிறார். சிலருக்கு அவர் ஏழாவது இமாமாகவும் சிலருக்கு மூடிமறைக்கப் பட்டவராகவும் அவர் காணப்படுகிறார். பெயரைப் பற்றி என்ன? அவரே மாதி! அவரே நாம் அறியாமலே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேவதூதர் மாதி! மாதி என்ற அந்தப் புனிதமான தீர்க்கதரிசி, மூசா நபியவர்களின் வெள்ளிய கை மரக் கிளையிலிருந்து வளியில் நீட்டிக் கொண்டு வந்த காலத்திலும், பிறகு இயேசுநாதர் இந்த உலகத்திலே உயிர் வாழ்ந்த காலத்திலும் கூட இருந்திருக்கிறார். ஆனால், அவர் திரும்பவும் தோன்றுவார்” என்று ஹாஸான் மிகுந்த உணர்ச்சியுடன் பேசினான்.

அந்தப் புனித நகரத்தின் கோபுரத்திற்கும் கோட்டைச் சுவருக்கும் அப்பால் கதிரவன் சென்று மறைந்தான். அவர்களின்