பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

சிறுமிகளும் இப்படிப் பலப் பலர் சென்றனர். கழுத்தில் மணி கட்டிய ஒரு கழுதையுடன் தொழுகைக்கு வந்த ஒரு பணக்கார அராபியன்தன் கையில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக எண்ணி மற்றொரு பையில்போட்டுக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துவிட்ட கூணன், “ஏழைகள்! ஏழைகள் கருணைக்காக ஏங்குகிறார்கள். ஆண்டவன் பெயரால் அருள் காட்டுங்கள்! அன்பு காட்டுங்கள்! ஆதரவு தாருங்கள்!” என்று கூவினான்.

“இழவு பிடித்தவர்கள்” என்று முணுமுணுத்துக் கொண்டே, எண்ணிய பணத்தை ஒரு பெரிய பையில் போட்டு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான் அந்தப் பணக்கார அராபியன்.

“கருணை காட்டுங்கள்! அல்லாவின் பெயரால் ஆதரவில்லாத ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு அருள் புரியுங்கள்! என்று மீண்டும் கத்தினான் கூனன்.

தன்னுடைய நீண்ட அங்கி தரையிலே உள்ள தூசியிலே புரண்டு வர நடந்து வந்த ஒரு முல்லா “மசூதிக்கு வா, ஏதாவது உண்ணக் கொடுக்கிறேன்.” என்றார்.

“எனக்கல்ல, பசியோடிருக்கும் இன்னோர் ஆத்மாவுக்கு ஏதாவது வேண்டும்” என்றான் கூனன். முல்லா போய்விட்டார். அந்த வழியாக இதைக் கவனித்து கொண்டே வந்த பெண்மணியொருத்தி, அங்கே நின்று, அவனைக் கூப்பிட்டு, “உலகத்துப் பாவங்கள் அனைத்தும் ஒழிவதற்காக கண்ணிர் விடும் அந்தப் புனிதமான ஏழைக்கு இதைக் கொடு” என்று தான் வாங்கிக் கொண்டு சென்ற பொட்டலத்தை அவிழ்த்து ஒரு ரொட்டியைக் கொடுத்து விட்டுப் போனாள். இந்த உலகத்தின் பாவங்களை கழுவுவதற்காகவே ஏழைகள் கண்ணிர் விடுகிறார்கள் என்று அந்தப் பெண்மணிக்கு தெரிந்திருந்தது.

அதை வாங்கிக் கொண்ட கூணன், “அம்மா, இது சாதாரண ஆளுக்கல்ல, இரத்தக்கண்ணிர் விட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஏழைக்கு உதவியாகும்” என்று நன்றியுடன் கூறினான். அந்த வழியாக, கம்பீரமான ஒரு குதிரையிலே, வெள்ளிச் சரிகையிட்ட கெளரமான ஆடையணிந்து உமார் வந்தான். உமாரைக் கண்டதும், கூனன் ஓடோடி வந்து, “தலைவரே!