பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

கிடந்தாள். அவன் அவளுடைய உருவத்தைக் காணவில்லை, அவள் இருந்த நிலையைப் பார்க்கவில்லை. ஆவல் ததும்பும் அவளுடைய கண்களை மட்டுமே பார்த்தான்.

அவள் அருகிலே சென்று மண்டியிட்டு அமர்ந்து, “என் உள்ளத்தின் உள்ளமே.” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

“பெருமை மிகுந்த என் பிரபுவே! தங்களுக்கு ஒரு கந்தைத் துணிகூடக் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லாத ஏழை நான்” என்று கூறியவள் அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். சூடேறிப் போயிருந்த அவளுடைய கன்னங்களின் மேலே, கண்ணிர் ஓடுவதை அவனுடைய கைகள் தெரிந்து கொண்டன. அழுது ஓய்ந்த பிறகு, அவன் அருகிலே நெருங்கி வந்தாள். அவளுடைய முகம் வெளுத்து, ஒளியிழந்து மெலிந்து காணப்பட்டது. ஆளே மாறியிருந்தாள். அவளுடைய காதல் பொருந்திய கரிய விழிகளும், இருண்ட மணம் பொருந்திய கூந்தலும் மட்டுமே முன்போல இருந்தன.

“நான் இங்கே நோயாகக் கிடக்கும்பொழுது, இரவு நேரத்தில் உச்சியில் தெரியும் விண்மீன்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். ஏனென்றால், அவைதாம், தங்கள் நட்சத்திர வீட்டுக்கு மேலேயும் தெரியும். தாங்களும் அவற்றையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்! அங்கே பட்டுத் திரையிலே பறக்கும் பாம்பு இருந்ததே; அது அப்படியே இருக்கிறதா? உயிருக்குயிரானவரே! என் மனக் கண்முன்னே, அந்த நட்சத்திர விடும், தங்கள் அறையும், அதில் இருந்த பொருள்களும் அப்படியப்படியே இருக்கின்றனவா? நான் பார்த்தபொழுது இருந்தபடியே இப்பொழுதும் இருக்கின்றனவா?”

“அப்படியே இருக்கின்றன அன்பே ! அவை உன் வரவுக்காகக் காத்திருக்கின்றன!” யாஸ்மி நிம்மதியான ஒரு பெருமூச்சு விட்டாள். “அப்படித்தான் நினைத்தேன்! நட்சத்திரங்களின் பெயரையெல்லாம் என்னால் நினைவு வைத்திருக்க முடியவில்லை. இரண்டொன்றின் பெயர்தான் எனக்குத் தெரியும். ஜபாரக் சில நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்வான். நட்சத்திரங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் தங்கள் உருவம் தோன்றும். சுல்தான் அவர்களின் சபையிலே தாங்கள் மிகப்