பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

வெள்ளி வளையல்களைக் கழட்டி அவனிடம் கொடுத்தேன். நிசாப்பூருக்குச் செல்வதாக இருந்த அவனிடம் அதைக் கொடுத்து தங்களிடம் என்னைப் பற்றிக்கூறும்படி கேட்டுக் கொண்டேன். இங்கு அலெப்போ வந்ததும், என் கணவனுக்கு என் மேல் கோபம் கோபமாக வந்தது. தனக்கு இணங்காமல் இருப்பதால், நான் அவனைப் பழிப்பதாக முடிவு கட்டினான். வெளியில் சென்று சாட்சிகளைக் கூட்டி வந்து, என்னை மணவிலக்குச் செய்து விட்டதாக அறிவித்து விட்டான். நான் பெருநோய் பிடித்தவளென்றும், கொடுமனம் படைத்தவளென்றும் சாட்சிகளிடம் காரணம் கூறினான். என்னை இங்கே அனாதையாக விட்டு விட்டு அவன் போய்விட்டான்” என்று யாஸ்மி தன் கதையைக் கூறினாள்.

“வளையலைப் பற்றியும் உன் செய்தியைப் பற்றியும் எனக்கு ஒன்றுமே தெரிவிக்கப்படவில்லை” என்று வருந்தினான் உமார்.

“நான் இப்பொழுது மணவிலக்குச் செய்யப்பட்டவள்!”

“இல்லை. நீ மணப்பெண். இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் உன்னை என்னுடைய மனைவியாக்கிக் கொள்ளப்போகிறேன். புதுப் பெண்ணே உனக்கு இது சம்மதமா?”

“இந்த மணப்பெண்ணுக்கு அழகும் இல்லை. வரதட்சயணையளிக்கப் பொருளும் இல்லை” என்று வருத்தத்தோடு பரிகாசமாகப் பேசினாலும், யாஸ்மியின் கன்னக் கதுப்புகளில் சூடான இரத்தம் பரவிச் சிவந்து விளங்கின. கண்கள் புதிய ஒளி பெற்றன. அந்த மகிழ்ச்சியில் எழுந்து உட்கார்ந்த யாஸ்மி தன் வேதனையை மறந்து உமார் எழுந்து செல்லும் வரை உட்கார்ந்தேயிருந்தாள். அவன் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் வலி தோன்றியது; படுக்கையில் சாய்ந்தாள்.

ஜபாரக் குதிரையைப் பார்த்துக் கொண்டு கீழே நின்றிருந்தான். கடிவாளத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, குதிரையின் மேல் ஏறியுட்கார்ந்து கொண்டு ஜபாரக்கோடு பேசினான் உமார். “இன்று மாலை நான் யாஸ்மியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். காஜீயொருவரையும் சாட்சிகளையும் அழைத்து வரச் சொல்லுகிறேன். நீ ரொட்டிக் கிடங்கிற்கு சென்று,