பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

பேசுவதற்காக வாயைத் திறந்த போதெல்லாம், அவருடைய தாடியின் மத்தியில் இருந்த உதடுகள் விரிந்த போதெல்லாம் ஒவ்வொரு தங்க நாணயத்தை வாயினுள் போட்டு அவர் பேச்சை ஒரு வழியாக நிறுத்தினான். சுற்றியிருந்த சாட்சிகள் மடியில் எல்லாம் கை நிறையப் பொன் நாணயங்களை அள்ளிக் கொட்டினான். குறிப்பாளனிடமிருந்து காகிதச் சுருளைப் பறித்துச் சாட்சிகளைக் கையெழுத்திடும்படி ஆணையிட்டான். குறிப்பாளனின் எதிரேயிருந்த கோப்பையிலே நல்ல மதுவைக் கொண்டுவந்து ஜபாரக் ஊற்றினான். மதுவின் ஊடே, தன்னுடைய அருமையான வைர மோதிரமொன்றை நழுவ விட்டான் உமார். காதியைப் பார்த்து “தங்கள் சொற்களெல்லாம் பொன் மொழிகள்” என்று உமார் கூறினான்.

கூட்டத்தினர் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் ஆடும் பொம்மைபோல அந்தக் காதியாகிய நீதிபதி விளங்கினார். திருமணம் முடிந்து “உங்கள் அனைவரின் சாட்சியாக இன்று இந்தப்பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். மறந்து விடாதீர்கள். விருந்து காத்திருக்கிறது. குழல் வாத்தியம் வாசியுங்கள்! விருந்து சாப்பிடுங்கள்!” என்று உமார் எல்லோரையும் கேட்டுக் கொண்டான்.

எழுந்து சென்று, வராந்தா ஓரமாக நின்று தெருவைப் பார்த்தான். அங்கே எரியும் விளக்குகளின் பிரகாசமான வெளிச்சத்திலே இருக்கும் ஏழை மக்களையும், பிச்சைக்காரர்களையும் குழந்தைகளையும் குட்டிகளையும் கண்டான். குழல் வாசிப்பவன் காதல் கீதம் ஒன்றை அருமையான ராகத்திலே ஆலாபனம் செய்தான். உமார் அங்கே கூடியிருந்த அனைவரையும் நோக்கி, “நன்றாக உண்ணுங்கள்! உண்ணுவதற்குப் போதுமான அளவு கேக்குகள் இல்லாமல் இருந்தால், கேக்குக் கிடங்கிலிருப்பவைகள் அனைத்தையுமே உண்டு விடுங்கள். சர்பத்தும், மதுவும், மாமிசமும் அரிசிக் கூழும் எல்லாம் வயிறு நிறைய உண்ணுங்கள். மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியில்லாதவர் யாருமே இங்கு இருக்கக் கூடாது. அப்படி யாராவது இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.