பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163


“இல்லை! இல்லை! அல்லாவின் அருளால் எல்லோரும் இன்பமாகவே இருக்கிறோம்!” என்று பதில் குரல்கள் பலப்பல ஒலித்தன.

உமாருக்கு மகிழ்ச்சி பொங்கியது. “எல்லாரும் மட்டற்ற மகிழ்ச்சியடைய வேண்டும். என் அன்புக்குரிய யாஸ்மியை நான் அடையும் இந்தத் திருமண நன்னாளிலே யாவரும் இன்பமாக இருக்க வேண்டும்!” என்று விரும்பினான். அவன் பார்வை பக்கத்திலே, இருந்த கணக்கனின் கைகளிலே இருந்த பணப் பெட்டியின் மேல் விழுந்தது. “அந்தப் பணப்பெட்டியை வெளியே தூக்கியெறி!” என்றான்.

“தலைவரே! இது பணப்பெட்டி” என்றான் அவன்.

“தெரியுமடா தெரியும் ! இந்தப் பணம் போனால் எனக்கென்ன பணமா இல்லை. என்னைப்போல் பணக்காரன் எவனடா இருக்கிறான்? இன்ப சொர்க்கத்தின் மதுவை குடித்துவிட்ட என்னைக் காட்டிலும் எவனடா பணக்காரன் இருக்கிறான்? என்று சொல்லிக் கொண்டே பணப் பெட்டியைப் பறித்து மேலேயிருந்தவாறு திறந்து தெருவிலே கொட்டினான். ஏழைகளும் பிச்சைக்காரர்களும், குழந்தைகளும், குட்டிகளும், ஆடவரும், பெண்டிரும், இளைஞர்களும் முதியவர்களும் எல்லோரும் விழுந்த பொன் நாணயங்களின் மேலே விழுந்து விழுந்து பொறுக்கினார்கள். வயிறாற உண்டறியாத அந்த வறுமையாளர் கூட்டம் அன்று வயிறாற உண்டதுடன் மின்னும் பொற்காசுகளும் கிடைத்த மிக்க மகிழ்ச்சியிலே ஆடிப்பாடிக் கொண்டு சென்றது. இவ்வாறு சீரும் சிறப்பும் பாட்டு, கூத்தும் கேளிக்கையும் வேடிக்கையுமாக உமார் கயாம்-யாஸ்மி திருமணம் நடைபெற்று முடிந்தது;


23. இதயந்தாங்காத இன்ப வேதனை

உமார் யாஸ்மியைத் தன்னுடைய கைகளிலே தூக்கிக் கொண்டான். அவள் நோயினால் நடுங்கிக் கொண்டே அவனுடைய கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவளை அப்படியே தெருவுக்குக் கொண்டு வந்தான். அங்கே தயாராகக் காத்திருந்த பல்லக்கின் உள்ளே, விரித்திருந்த பஞ்சு மெத்தையிலே மெதுவாக அவளை வைத்தான்.