பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வாருங்கள். இந்த ஏழை எலிராக்கின் கடைக்கு வாருங்கள். பட்டுத் துணிகளும் பவழக் கற்களும் முத்து வைரமும் எத்தனையோ வகைகள் என் கடையில் இருக்கின்றன. தங்கள் மணப் பெண்ணின் சிவந்த உதட்டுக்குக் பொருத்தமான முத்துப் பதித்த தங்கப் புல்லாக்கும் இன்னும் வகை வகையான நகைகளும் இருக்கின்றன” என்றான்.

அதற்குள்ளே, மற்றொரு தாடிக்காரன் வந்து, “ஏழைகளின் பாதுகாவலரே! எங்கள் சுல்தானின் தோழரே! இந்தப் புறம் வாருங்கள். ஸீராக்கிற்கு வைரக் கல்லுக்கும் படிகாரத்துக்கும் உள்ள வேறுற்றுமை கூடத் தெரியாது. அவனுடைய கடைப்பொருள்கள் எல்லாம் போலி. எல்லாம் இந்த அலெப்போவிலேயே செய்யப்பட்டவை. என் கடைக்கு வாருங்கள். தங்க நூல் இழைத்து நெய்யப்பட்டப் பட்டுத் துணி வகைகள் கட்டுகட்டாக இருக்கின்றன. பவழம் பதித்த வண்ணத் துணிகள், டமாஸ்கஸ் பட்டணத்திலிருந்து வரவழைக்கப் பட்டவை. எத்தனையோ விதங்கள்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே இன்னொருவன் வந்து உமாரின் சேணத்தைப் பிடித்துக் கொண்டான்.

“தலைவரே! மதவிரோதிகளான இந்த நாய்களுடன் ஏன் பேரம் செய்கிறீர்கள்! அழுக்குப் பிண்டங்களே, எங்கள் தலைவரின் தோழியான மங்கையின் வெள்ளிக் கழுத்துக்குப் பொருத்தமான ஒளி வீசும் மணிக் கற்கள் வேண்டும் என்ப்து உங்கட்குத் தெரியவில்லையா? ஒடுங்கள்! ஒடுங்கள்! தலைவரே! உண்மையான மத நம்பிக்கையுடையவனும், சையத்தின் பேரனுமாகிய என் கடைக்கு அருள் கூர்ந்து வருகை புரியுங்கள். அழகான பொருள்கள் அனைத்தும் தங்கள் விருப்பப்படி வாங்கிக் கொள்ளலாம்” என்று, குதிரையை இழுத்தான்.

“இருட்டில் வழி மறிக்கும் குருடர்களே! உங்களிடம் எல்லாப் பொருள்களையும் நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், அவற்றின் விலையை சுல்தான் அவர்களே கொடுப்பார்கள். தெரிகிறதா? இந்த இரவு மீண்டும் வரப்போவதில்லை. உம் கடைகளை எல்லாம் திறவுங்கள்” என்று உமார் அவசரப் படுத்தினான்.

அன்று இரவு, ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமாகப் பறந்தது. கோடைக் காலமாகவும், புழுக்கமாகவும் இருந்ததால், உமார் தன் கூடார வாசலில் படுக்கையைப்