பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

“ஆ! இது மிக அழகாக இருக்கிறது. நாளைக் காலையில் எழுந்து தலைவாரிக் கொண்டு இந்த முடியை நான் அணிந்து கொள்வேன். பிறகு ஒருநாள் நாம் ஆற்றங்கரை அரண்மனையில் இந்த இடத்தில் அல்ல. நம்முடைய சொந்த அரண்மனையில்வெண்மையான அன்னங்கள் நீந்திச் செல்லும் அழகான ஆற்றங்கரையில் உள்ள நம் சொந்த அரண்மனையில் இருப்போம், அல்லவா?”

இப்படிப் பேசிக் கொண்டிருந்த யாஸ்மி திடீரென்று ஜன்னி கண்டவள்போல் பிதற்றத் தொடங்கினாள். நோயின் கடுமை அதிகமாகியது. அவளுடைய கண்கள் இருண்டன. உமார் பயந்து ஜபாரக்கை அழைத்தான். அவன் வந்து பார்த்தவுடனேயே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“பிளேக் வியாதி (கொள்ளைநோய்) போல் தோன்றுகிறது” என்றான் ஜபாரக்.

“இல்லை. அது ஒரு விதமான காய்ச்சல். கடவுளைப் பிரார்த்திப்போம்! பொழுது விடிவதற்குமுன் வியாதி நின்று போகும்படி வேண்டுவோம்” என்றான் உமார்.

“தொழுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை!” என்று முடித்தான் விகடன்.

குளிர் நீங்குவதற்காக ஜபாரக் கூடாரத்தைச் சுற்றி நெருப்பு எரிக்கப் பெற்றது. துணியினால் ஆன கூடாரச் சுவர்களில் நெருப்பின் செவ்வொளிப்பட்டு விளங்கிக்கொண்டிருந்தது. யாஸ்மி வேதனையால் முனகிக்கொண்டு பக்கத்துக்குப் பக்கம் புரண்டுக் கொண்டிருந்தாள். பக்கத்தில் உமார் மண்டியிட்டுக் கொண்டிருப்பதும், கூடாரத்தின் ஒருமூலையிலே ஜபாரக் உட் கார்ந்து கொண்டு கடவுளின் புனிதமான பெயர்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டு இருப்பதெல்லாம் அவள் அறிவதற்கு அப்பாற்பட்ட விஷயங்களாகிவிட்டன. நெருப்பு அமர்ந்து சாம்பலாகி விட்டது. கூடாரத்துச் சுவர்களில் ஆடி ஒளி வீசிக்கொண்டிருந்த செந்நிறமும் மறைந்து விட்டது.

திடீரென்று உமார் ஜபாரக்கை அழைத்தான். “விளக்குளை ஏற்று. அவள் பேசிவிட்டாள். இதோ என்னைத் தொட்டுக் கொண்டிருக்கிறாள் காய்ச்சல் விட்டுவிட்டது” என்றான்.