பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

விளக்கைப் பிடித்துக்கொண்டு அவர்கள் அருகிலே வந்து நின்றான் ஜபாரக், யாஸ்மியைக் கவனித்தான். அவள் அசையாமல் படுத்திருந்தாள். அவளுடைய கண்கள் முடியிருந்தன. அவளுடைய ஒரு கை உமாரின் கழுத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன.

“என் உயிரே! என் உயிரே!” அசையும் உதடுகளிலிருந்து வந்த சொற்கள் நின்றன. அவள் கழுத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜபாரக் விளக்கைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். உமார் அவளைக் கவனித்துக் கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். யாஸ்மி, மூச்சு விடுவதை நிறுத்திவிட்டாள். ஆனால் உமார் அவளையே கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்கு என்னவோ மாதிரியிருந்தது. விளக்கைக் கீழே வைத்துவிட்டு, உமாரின் தோள்களைத் தொட்டான்.

உமாரினுடைய ஆட்கள் எல்லோரும் கூடாரத்திற்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். திடீரென்று எழுந்த காற்று தூசியைக் கிளப்பி திரையிட்டு கொண்டிருந்தது. அந்தத் தூசித் திரையின் ஊடே சூரியன் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஜபாரக் உள்ளும் புறமும் வருவதும் போவதுமாக இருந்தான். உமாரின் நிலையை வெளியே யிருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். “அவர் இன்னும் பேசமாட்டேன் என்கிறார். அவளுடைய முடிய கண்களில் பன்னீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்”.

“அவள் என்ன பிளேக் நோயினால்தானே இறந்துபோனாள்!” என்று ஒரு சிப்பாய் கேட்டான்.

“அவள் இறந்துபோனாள் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. இல்லாவிட்டால், திருமண நகைகளெல்லாம் எடுத்து அவளுக்கு அணிவித்துக் கொண்டிருப்பாரா?” என்று ஜபாரக் அவர்களுக்குக் கூறினான்.

“ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, வருத்தியழுதால்தான் சாகக் கொடுத்தவனுக்கு நிம்மதி ஏற்படும்.” என்றான் ஒருவன்.