பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180


அந்த மது வியாபாரி, மற்ற வியாபாரிகளின் பேச்சை, மறுத்துப் பேசவில்லை. அவர்களுடைய ஒட்டகச்சாரி கண்ணுக்கு மறையும் வரை காத்திருந்து பிறகு புறப்படும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.

“இன்றையப் பொழுதில் என்ன நடக்க வேண்டுமென்று ஆண்டவன் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறான். அவன் எப்படி எழுதி வைத்திருக்கிறானோ அப்படித்தான் நடக்கும். அதைத் தடுக்கமுடியாது. ஒரு முட்டாள், ஒரு குடிகாரன், ஓர் அர்மீனியன் இவர்களோடு நான் பிரயாணம் செய்ய வேண்டுமென்று என் தலையில் எழுதியிருக்கிறது. அதை நான் எப்படித் தவிர்க்கமுடியும்?” என்று வேதாந்தம் பேசத் தொடங்கினான்.

மற்ற வியாபாரிகள் கூட்டத்தின் கடைப்பகுதி, தூரத்து மேட்டுக்கப்பால் மறைந்த பிறகு, மது வியாபாரி தன்னுடைய ஒட்டகங்களைக் கிளப்பினான். அவனுடைய வேலையாட்கள் தங்கள் கைக் கம்புகளை எடுத்துக்கொண்டார்கள். ஜபாரக், தன் கழுதையின்மேல் ஏறிக்கொண்டான். கண்ணைக் கூசவைக்கும் கதிரொளியில் அவர்கள் கணவாய்ப் பாதை வழியாக முன்னேறினார்கள். ஒரு மேட்டுச் சரிவில் அவர்கள் ரைவாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது, ஒட்டகக்காரர்கள் தங்கள் ஒட்டகங்களைச் சடக்கென்று நிறுத்தினார்கள். குதிரைக் குளம்புகளின் படபடப்பான ஓசையின் எதிரொலி அந்தப்பள்ளத்தாக்கு முழுவதும் நிறைந்தது. எங்கோ, மனிதர்களின் கூப்பாடு கேட்டது . கூர்டியர்கள் வந்து கொல்லப்போகிறார்கள் என்று மது வியாபாரி பயந்து துடித்தான். சற்றுமுன் அவன் பேசிய வேதாந்தமெல்லாம் மறந்துபோய் விட்டது.

“நாம் ஒடித் தப்பிப்பது கடினம். ஆகையால் மிருகங்களை எங்காவது மறைத்து வைப்போம்” என்று அக்ரோனோஸ் ஆலோசனை கூறினான். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஒடைப்படுகையின் வற்றிக்கிடந்த இடைவெளியில், ஒட்டகங்களை அவற்றின் சுமையுடன் ஒட்டிச்சென்று நிறுத்தினார்கள். பக்கத்தில் வளர்ந்திருந்த செடிகளின் மறைவிலே மனிதர்கள் பதுங்கிக் கொண்டார்கள்.

“அவனுடைய விதியின் பிடியிலிருந்து யாரும் தப்பு முடியாது!” என்று அழுதுகொண்டே மது வியாபாரியும் ஒளிந்துகொண்டான். பக்கத்தில் உயர்ந்து விளங்கிய மேட்டின்