பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

அடியிலே மலைமுகடுகளிலும் மேடுகளிலும் ஏறி இறங்கி அவர்கள் பயணம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.

இறந்துபோன மனிதர்கள் தங்கள் புதை குழியைத் தேடிக்கொண்டு செல்வதுபோல் சுரத்தில்லாமல், உற்சாகமில்லாமல், இந்தப் பயணம் இருப்பதாக ஜபாரக் கூறினான்.

“இருந்தாலும், காற்று நிறைந்த இந்த வெட்டவெளிப் பிரயாணம் உமாருக்குப் பிடித்தமாக இருப்பது போலத் தோன்றுகிறது” என்று அக்ரோனோஸ் கூறினான்.

அக்ரோனோஸ், ஜபாரக்கைப் பார்த்துக் கேட்டான். “இதோ, இங்கே பார், எனக்கு ஒரு விஷயம் தெரியவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலே, நீ யாஸ்மி என்ற அந்தப் பெண்ணிடமிருந்து ஏதோ செய்தியுடன் இவரைத்தேடி, இவர் வீட்டுக்கு வந்ததாகச் சொன்னாய் அல்லவா? ஆனால், அவர் உன்னை அலெப்போ நகரில் பிச்சைக்காரர் கூட்டத்தில் பார்க்கும் வரையிலே எதுவும் தெரியாதென்று சொன்னாரே அதன் விவரம் என்ன? என்றான்.

“ஏனய்யா, நான் பொய் சொல்கிறேனென்றா நினைத்தாய்? அல்லாவே நீர்தாம் சாட்சி சொல்ல வேண்டும். ஆண்டவன் அறிய நான் அவரைத் தேடி, விண்மீன் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், அவர் அப்பொழுது ஊரில் இல்லை. வந்தவுடன் தகவல் சொல்லும்படி, கூறி அடையாளப் பொருளும் கொடுத்துவிட்டு வந்தேன்.”

“ஆனால், அவருக்குச் செய்தியே சொல்லப்படவில்லையே! அது எப்படி? வா! அவரிடம் வந்து சொல்லு’ என்று அவனை வற்புறுத்தினான். அக்ரோனோஸ்.

“முடியாது. அவர் அந்தப் பெண்ணின் ஏக்கமாகவே இருக்கிறார். அவளைப் பற்றி நினைவுபடுத்தினால் கெடுதலாக முடியும். பயமாக இருக்கிறது” என்று ஜபாரக் மறுத்துவிட்டான்.

“அதெல்லாம் ஒன்றும் நடக்காது. வா” என்று கூறி அந்த ஆர்மீனியன், விகடனின் கழுதையுடைய மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டே தன் குதிரையைத் தட்டிவிட்டு, முன்னால் சென்று கொண்டிருந்த உமாருக்குப் பக்கத்திலே,