பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188


“தலைவரே! ஆறுமணி நேரம் என்பது அப்படி என்ன பெரியது? ஒரு வெள்ளரிப் பழத்தைத் தின்றுவிட்டுக் குறட்டைவிட்டால் எழுந்திருக்கும் போது மணி சரியாக வந்துவிடும்!” என்று ஜபாரக் கூறினான்.

“ஆகா! நீயும் வானசாஸ்திரிதான்! பலே, பலே! அவர்களுக்கு நீ ஒன்றும் குறைச்சலில்லை” என்று கோபத்துடன் வேடிக்கையாகக் குமுறிவிட்டு, “அரக்கு வைத்து மூடியிருக்கும் அந்தச் சாடியைத் திறந்து - மது ஊற்றிக் கொண்டுவா” என்று உமார் கட்டளையிட்டான்.

அவன் குவளையில் ஊற்ற ஊற்ற உமார் குடித்துக் கொண்டிருந்தான். இந்தக் கூடாரம் அடிப்பவன் உடலுக்குள்ளே - ஏதோ பேய் குடிகொண்டிருப்பதாகவே மைமன் நினைத்தான். தன்னுடைய மனது தெளியும்வரை அந்த இடத்தை விட்டுப் போகக் கூடாதென்று அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். ஏனெனில் அவன் அதுவரை குறித்து வைத்திருந்த கணக்குகள் அனைத்தும் ஒழுங்காக ஒருநாள் கூடத் தவறாமல், மிகக் கவனமாக எடுக்கப்பட்ட குறிப்புகளாகும். சிறிது நேரம் சென்றதும் உமார், மேசைமேல் கிடந்த குறிப்புத் தாள்களைக் கைகளில் எடுத்துக் கொண்டே, “இந்தக் குறிப்பெல்லாம் யார் எடுத்தது? என்று கேட்டான்.

“தலைவரே! நானே எடுத்த குறிப்புகள்! பலமுறை சரிபார்த்துவிட்டேன்! தாங்கள் அதில் ஏதும் தவறு காணமுடியாது” என்று மைமன் உறுதியளித்தான்.

உமார், முதல் காகிதத்தில் இருந்த அந்தக் குறிப்புகளை ஒரு பார்வை பார்த்தான். அடுத்த காகிதத்தை எடுத்தான். ஆழ்ந்த கவனம் செலுத்தி அதைப் பார்த்தான். பிறகு மைமனை நோக்கி “நீ உன்னுடைய குறிப்புகள் எல்லாம் சரியானவை என்று அடித்துப் பேசுகிறாய். இஸ்பிகாரி, அவனுடைய கடிகாரத்தில் தவறு கிடையாதென்று உறுதி சொல்லுகிறான். ஆக, உங்களில் எவனோ ஒருவன் தவறு செய்திருக்கிறீர்கள்? அது யார்? அதுதான் தெரியவேண்டும்!” என்று கேட்டான்.

“நீர்க்கடிகாரம் சரியாகவே வேலை செய்கிறது. அதை நானும் உறுதியாகச் சொல்லமுடியும். ஏனெனில் அதை ஒரு மாதம் முடிந்தவுடனேயே சரிபார்த்துக் கொண்டுதான் தொடர்ந்து