பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மூலையிலே கந்தைத் துணியை விரித்துப் படுத்துக் கொண்டான். மைமன் மட்டும் ஆந்தையைப் போல் விழித்துக் கொண்டு உமார் வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டேயிருந்தான். எரியும் விளக்கில் எண்ணெய் குறையும் போதெல்லாம், மேலும் மேலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான்.

“இப்படி யிருக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு காகிதமாக எடுத்துக் கணக்குச் செய்து கொண்டே இருந்தான். காலைப்பொழுது விடியும் நேரத்தில்தான், மைமனின் குறிப்புகளின் கடைசித் தாளைப் பரிசோதனை செய்து முடித்தான் உமார்.

“என்னுடைய எண்கள். சரியாக இருக்கின்றனவா?” என்று தயங்கிக் கொண்டே மைமன் கேட்டான்.

சிறிது நேரம், டோலமியின் அட்டவணையின் முதல் பக்கத்தையும் கடைசிப் பக்கத்தையும் ஆழ்ந்து கவனித்தான் உமார். “உன்னுடைய கணக்குக் குறிப்பில் எந்தவிதமான பிழையும் இல்லை. ஆறு மணி பதினெட்டு நிமிடம் என்ற தவறு நிலையான தவறு. இதோ பார், முதல் எண்ணும் ஒரே மாதிரியாக ஆறு மணி பதினெட்டு நிமிடங்கள் வேற்றுமைப் படுகின்றன. முதலிலிருந்து கடைசி வரை அந்தத் தவறு நிலையாக இருக்கிறது!”

தன்னுடைய கணக்கு முழுவதுமே தவறு என்று கூறுகிறாரே என்று மனம் வருந்தி விழித்துக் கொண்டு நின்றான் மைமன். “புரியாத விஷயமாக இருக்கிறது. அதை ஒப்புக் கொள்வதைத் தவிர! வேறு வழி என்ன இருக்கிறது? என்று வருந்தினான். ஆனால் அந்த சமயத்தில், உமார் “இதோ பார்! தவறு இங்கே இருக்கிறது!” என்று கூறி டோலமியின் கையெழுத்துப் பிரதியைக் காட்டினான்.

“கடவுளே என்ன சொல்கிறீர்கள். அதிலேயே பிழை? இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளாகப் பயன்பட்டு வந்திருக்கும் இந்த அட்டவணையில் பிழையிருக்க முடியாது.” என்று மைமன் குளறினான். தன்னுடைய கணக்குத் தவறு என்பதை ஒப்புக் கொள்ள அவன் தயாராக இருந்தான். ஆனால் அறிஞர் டோலமியின் ஆராய்ச்சி முடிவைத் தவறு என்று கூற அவனுக்கு அச்சமாயிருந்தது.