பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

தாள்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துக் கணக்குப் போட்டுப் பார்த்துக்கொண்டேயிருந்தான். தான் போட்ட கணக்குகள் சரியா என்று மீண்டும் பார்க்கும்படி அருகில் இருந்த மைமனிடம்கொடுத்தான். மைமன் எதோ தெரியாத விஷயத்தைப்பற்றி ஒன்றும் புரியாமல் செய்யும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபாடு கொள்ளவில்லை. இது பெரும் பாலும் பயனளிக்காதென்பதே என்னுடைய எண்ணம். ஆனால், உமார் எந்த அடிப்படையிலே வேலை செய்கிறான் என்பதை அவன் போகப் போகப் புரிந்துகொண்டான்.

வித்தியாசப்படும் மணிக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு, அந்த வித்தியாசப்படும் மணியளவுக்கு, எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதைக் கண்டு பிடித்துவிட்டால், அந்த இடைவெளித்துரத்தில் இருக்கும் ஊர் ஒன்றைத் தெற்கு அல்லது வடக்குத் திசையில் கண்டுபிடிக்க வேண்டும். இதிலிருந்து அந்த இடத்தை உத்தேசமாகத்தான் சொல்ல முடியும். உறுதிப்படுத்த முடியாது, அவர்களுடைய கணக்கு வேலையிலிருந்து, அந்த இடம் கீழ்மேல் ரேகையின் ஐந்தாவது டிகிரிக் கோட்டில் ஓரிடத்தில் இருக்க வேண்டுமென்ற அளவுக்குத் தெரிந்தது.

“நாம் அறியாத அந்த ஆராய்ச்சிக் கூடம் அலெக்சாண்டிரியா நகரின் வடக்கில் ஐந்தாவது டிகிரியில் இருக்கவேண்டும்” என்று உமார் கூறினான்.

“தெற்கில் ஐந்தாவது டிகிரியிலும் இருக்கலாமே?” என்று மைமன் தன் ஐயப்பாட்டைக் கூறினான்.

உண்மையில் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் தென்பகுதியில், பாலைவனங்களும், யாருக்கும் தெரியாத மலைப்பிரதேசங்களும் இருப்பதாகத்தான் பூகோளப் படம் காட்டியது. உமார் பூகோளப் படங்களை நம்பிக் கொண்டிருப்பவனல்ல. ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் அலெக்சாண்டிரியாவின் தென் பகுதியிலிருந்து பார்த்தால் தென்படாது, ஆகவேதான் வடபகுதியில் இருக்கும் என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறினான்.