பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


உமாரின் குரல் கடுகடுத்தது. முகம் கோபத்தால் சிவந்தது. கைகளை இடுப்பில் பிடித்தபடியே, கொல்லவரும் மதயானையைப்போல உமார் டுன்டுஷை நோக்கி நடந்தான். தன் உயிரைப் பறிக்கவரும் கொள்ளியைப்போல் எரியும் அந்தக் கண்களையும் தன் உள்ளத்தை ஊடுருவிச்செல்லும் நஞ்சு தோய்ந்த அந்த அம்புபோன்ற பார்வையையும் பார்த்த டுன்டுஷ் பயந்துவிட்டான், அவனுடைய உள்ளத்தின் நினைவுகளையும், பயத்தின் பொருளையும் உமாரும் அறிந்து கொண்டான்.

“ஆண்டவனின் தொண்ணுற்றொன்பது பெயர்களின் ஆணையாகவும் கூறுகிறேன். எனக்கு இந்த விஷயமே தெரியாது. தங்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பெண்ணையும் நான் பார்த்ததுகூடக் கிடையாது. ஐயோ! மைமன்; உதவி உதவி!” என்று டுன்டுஷ் கத்தினான்.

உமாரின் கைகள் அவனுடைய கழுத்தை இறுக்கிப் பிடித்தன. அவனை ஓர் ஆட்டு ஆட்டினான். டுன்டுஷ் வலையில் சிக்கிய மிருகம்போலத் திணறினான். உமாரின் கை விரல்கள், அவனுடைய சதைக்குள்ளே கத்தி பாய்வதைப்போல ஆழப் பதித்தன. அவனுடைய கண்கள் எரியும் நெருப்புப்போல இருந்தன. மைமன் உதவிக்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான் டுன்டுஷ்.

டுன்டுஷ் அடைந்த அதிகமான பயத்தின் காரணமாக, தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எப்படியோ உருவிக்கொண்டு, கண்மூடித்தனமாக உமாரைக்குத்தினான். கத்தியின் முனைஉமாரின் துணியைக் கிழித்து, சதையைக் கீறி எலும்பையும் தாக்கிவிட்டது. இரத்தம் ஒழுகியது. ஆட்கள் வந்து அவனை விடுவித்துத் தரையில் தள்ளினார்கள். அங்கே நீட்டிப்படுத்துப் பெருமூச்சு வாங்கிக்கொண்டு கிடந்தான். அவனுடைய கலங்கிய கண்களிலே மங்கிய தோற்றத்தில் ஐந்தாறு பேர், பாயும் வேங்கையைப் போல் நின்ற உமாரைச் சுற்றிவளைத்துப் பிடித்துக்கொண்டு நிற்பதையும், கிழிந்த துணியின் கீழே வெட்டுப் பட்ட தோளிலிருந்து வடியும் குருதி நெஞ்சில் வழிவதையும் தெரியக் கண்டான்.

“நாயே! நமக்கிடையிலே இரத்தப் பகை தோன்றிவிட்டது. தெரிந்துகொள். ஆனால், இப்பொழுது சிந்துகிறேனே; இந்த