பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

இரத்தத்தினால் அந்தப் பகை வரவில்லை. தெரிந்து கொள்; அந்த இரத்தம் எனக்குள்ளேயே நாளுக்குநாள் சிந்திக்கொண்டு வருகிறது. அது இப்படி வழியவிடமாட்டேன். போ! என் எதிரில் மீண்டும் தோன்றாதே! அப்படி வருவாயானால் நீ செத்துப் போவாய்!” என்று கொஞ்சங்கூடப் பதட்டமில்லாமல் அமைதியாகவும் அழுத்தமாகவும் கூறினான் உமார்.

வேலைக்காரர்கள் மூலமாக நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜபாரக், அன்று இரவு, தாக்கின் வாசல் அருகிலே வியாபாரி அக்ரோனோசைச் சந்திக்க நேர்ந்தபோது, அவனிடம் கூறினான். பிறகு ஜபாரக் பிரிந்து சென்ற பின், அங்கே அங்காடிச் சந்தையிலே, கூலிக்குச் செய்தி கொண்டுபோகும் ஒருவனைக் கூப்பிட்டு, ஒரு தாளிலே, இரண்டுசொற்களை எழுதி, அதை ஒட்டி, முத்திரை வைக்காமல் அவனிடம் கொடுத்து, “இதை ரே நகருக்கு எடுத்துச்செல். அங்கே பிரயாணிகள் தங்கும் சத்திரத்திலே சென்று, மண்டபத்திலே நின்றுகொள், ஏழின் இறையவருக்கு ஒரு கடிதம் கொண்டுவந்திருப்பதாகக் கூறவும். அவர் உன்னை நோக்கி வருவார். அவரிடம் கொடு” என்றான்.

“ஐயா! அந்த ஆள்தான் ஏழின் இறையவர் என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்? பெயரும் புதுமாதிரியாக இருக்கிறதே?” என்று அந்த அடிமை ஐயங் கிளப்பினான்.

“அவரே உன்னிடம் வந்து கூறுவார்!”

“ஆ! இது என்ன விந்தையோ?” என்று ஆச்சரியப்பட்டுவிட்டு, அந்தச் செய்தியை வாங்கிக் கொண்டு போனான். அவ்விடத்தை விட்டு அகன்றதும் - அதைப் பிரித்துப் பார்த்தான். படிக்கத் தெரியா விட்டாலும் அது சாதாரணச் சொற்களைப் போலவே தோன்றியது, அதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே என்பதற்காக, ஒரு முல்லாவிடம் போய் அதைப் படித்துத் தெரிந்து கொள்ள விரும்பினான். அவர் உரக்கப் படித்தார். காலம் வந்து விட்டது என்று இருந்தது. இதிலே பயப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று மனம் தெளிந்து அந்த அடிமை ரே நகர் நோக்கிச் சென்றான்.