பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201


தோள் காயத்திற்குக் கட்டுப் போட்ட பிறகு உமார் தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். கதவு வழியாக அவனைக் கவனித்த இஸ்பிகாரி, அவன் ஏதோ சிறு சிறு துண்டுத் தாள்களிலே என்னவோ எழுதிக் கொண்டிருப்பதாகவும், அந்தத் தாள்களிலே சில தரையிலே விழுந்து கிடப்பதாகவும் கூறினான்.

ஆராய்ச்சிக் கூடத்தில், முடிக்கப்படாது, கண்டு பிடிக்காமல் பாக்கியிருந்த விஷயங்களை மேற்கொண்டு கணக்குச் செய்து கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் மைமன் என்ற கிழப் பேராசிரியன், உமார் இல்லாமல், எதையும் செய்ய முடியவில்லை அவனால், பூகோளப் படம் சரியானதல்ல. கிரேக்க வான நூலாசிரியர்களின் பெயர்கள் அவனுக்கு வாய்க்குள் நுழையாதவையாக இருந்தன.

சிலச் சில வழிகளில் ஆராய்ச்சி செய்த பிறகு, பலன் எதுவும் ஏற்படாததால், தன் வேலையை முடிந்துக் கொண்டு, ஆராய்ச்சிக் கூடத்தைவிட்டு வெளியேறினான் மைமன். நகரத்திற்குப்போன அவன் திரும்பவும் இரவில்தான் வந்தான். வந்ததும் இஸ்பிகாரி அவனிடம் மேலே ஆராய்ச்சிக் கூடாரத்தில் ளக்கு எரிவதாகவும், உதவியாளர்கள் ஒருவரும் அங்கே இல்லை என்றும் கூறினான். உமார்தான் அங்கே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, அங்கே சென்றான் மைமன். தாழ்ந்த ஒரு மேசையின் மேல் சாய்ந்து விரித்து வைத்திருந்த டோலமியின் கையெழுத்துப் பிரதியை உமார் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“நாம் தேடும் அந்த இடம் ஆசியா மைனருக்கு மேற்கே இருக்கிறது!” என்றான்.

“ஆசியாமைனருக்கு மேற்கே வெறுங் கடல்தான் இருக்கிறது. உம், இத்தனை நாள் ஆராய்ச்சியும் பயனில்லாமல் போய் விட்டதே!” என்று மைமன் வருந்தினான்.

“இல்லை, பலன் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது. முன் காலத்தில், பூபாகத்தில் பலப் பல நகரங்கள் இருந்தன. கடலின் இடையேயும் சிலச் சில நகரங்கள் இருந்திருக்கின்றன” என்று சொல்லிக் கொண்டே வந்தவன், தன் எதிரில் இருந்த வான சாஸ்திரிகளின் பட்டியலில் இருந்த பெயரை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே வந்தான். பெயர்களின் கீழே ஒடிக் கொண்டிருந்த அவனுடைய பேனா ஓரிடத்திலே நின்றது.