பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203

படுக்கச் சென்றார்கள். காலையில் விடிவதற்கு நெடுநேரம் முன்பே எழுந்தார்கள். எதிரில் இருக்கும் தாள்களிலே இரண்டு கண்களும் மொய்த்த வண்ணம், மைமன் வேலையை விடாமல் செய்தான்.

அசதியாக இருப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தக் கிழவன் வேலையிலே ஈடுபட்டிருந்தான். உமார் வாய் முணமுணவென்று பெருக்குவதும் கூட்டுவதும் கழிப்பதும் வகுப்பதும் சரிபார்ப்பதுமாக இருந்தான். கடைசியாகச் சிரித்துக் கொண்டே, “போதும் போதும்! அந்த இடமேதான், எல்லாம் அதற்குச் சரியாக இருக்கின்றன!” என்றான்.

“இரு, இரு இன்னும் சிறிதுதான்” என்று கூறிக்கொண்டே, மைமன் தன்னுடைய வேலையைச் சுறுசுறுப்பாகப் பார்க்கத் தொடங்கினான். அவன் கணக்குகளெல்லாம் செய்து சரிபார்த்து, மனஅமைதியடைந்த பிறகுதான், அதை ஒப்புக் கொண்டான்.

“சரியாக இருக்கிறது. சரியாக இருக்கிறது. அட்டவணை சரியாகவே இருக்கிறது. அறிஞர் அலிசென்னாவும் இதைச் சரியென்றே ஒப்புக் கொள்வார். பேராசிரியர் உமார் அவர்களே, அறிஞர் டோலமியைப் போலவே, நாமும் ரோட்ஸ் தீவின் விஞ்ஞானி வானநூல் அறிஞன் ஹிப்பார்க்கஸ் வகுத்த இந்த அட்டவணையை இனி எளிதாகப் பயன்படுத்தலாம்” என்றான், மைமன்.

மைமனுக்கு உடனே ஆஸ்தான மண்டபத்திலேபோய் உட்கார வேண்டும்போல் இருந்தது. தன்னுடைய மாணவர்களுக்கெல்லாம் இந்தப் புதிய உண்மையைப் போதிக்க வேண்டும்போல் இருந்தது. நிசாப்பூர் கலைக் கழகத்திலே உள்ள ஆசிரியர்களுக்கெல்லாம் இந்தப் புதிய உண்மையைப் போதிக்க வேண்டும்போல் இருந்தது. நிசாப்பூர் கலைக் கழகத்திலே உள்ள ஆசிரியர்களுக்கெல்லாம் அரிய ஆராய்ச்சியைப்பற்றிக் கூறவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், உமார் அவனைத் தடுத்துவிட்டான்.

“ஏற்கெனவே, உலேமாத் தலைவர்கள் காலத்தை அளப்பது புனித மறையால் தடுக்கப்பட்ட செயல் என்றும், நமக்கு இந்த விண் மீன் வீட்டில் தீய ஆவிகள் உதவிசெய்கின்றன என்றும்