பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

எப்படி அடங்கியிருக்கிறதென்று பார். குறிப்பிட்ட ஓர் அளவு குடித்து விட்டாயானால் உலகக்கவலைகள் ஆயிரத்தையும் ஒரு நொடியிலே மறக்கலாம். கோப்பை மது முழுவதையும் குடித்து விட்டால், மாமூது அரசரின் தங்கச் சிங்காதனத்திலே இருந்து இந்தத் தரணியையே அரசாளலாம்; தாவூதின் இதழ்கள் அசையப் பிறக்கும் இசையைக்காட்டிலும் மேலான இனிய சங்கீதத்தைக் கேட்கலாம். சொலு இந்தக் கோப்பையைச் செய்தவன் இதைத் தரையிலே தூக்கியெறிந்து துண்டு துண்டாய் உடையச் செய்வானா?”

“செய்ய மாட்டான்!”

“அப்படியானால் அழகிய மனித உடலை உருவாக்கும் அன்பும் இருக்கிறது; அதை அழிக்கும் சினமும் இருக்கிறதே! இது ஏன்?”

தரையில் கிடந்த கசங்கிய தாள் ஒன்றை எடுத்து உமார் ஜபாரக்கின் கையில் கொடுத்தான். அவன் அதை விளக்கின் அருகிலே கொண்டு போய் விரித்துப் படித்தான். உமாரின் அழகிய கையெழுத்தில், பாரசீகமொழியில் நான்கு அடிகள் கொண்டு கவிதை ஒன்று எழுதப் பெற்றிருந்தது.

புதிரான பாதையிலே
போகுமிந்தப் பயணமே
இதில் இன்பம் இல்லையே
என்றுந் துன்பம் துன்பமே!
மதுக் கிண்ணம் கொண்டு நீ
மகிழ வைப்பாய் இரவிலே!
எதிர் கால எண்ணமே
ஏதும் வேண்டாம் அன்னமே!

இதைப் படித்துவிட்டு “ஐயோ!” என்று பெருமூச்சு விட்டான் ஜபாரக் பிறகு திடீரென்று சுருங்கியிருந்த அவன் முகம் மலர்ந்து விரிந்தது. “எழுதும்! எழுதும் அதிகமான கவிதைகளை எழுதும்! அவையே உம் கண்ணின் பரிசாக இருக்கட்டும்” என்று கூறினான்.