பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



208

அதை ஆதரித்தான். அதன்படியே, அவர்கள் மீண்டும் ஒருவருடம், காலங்காட்டும் கருவிகளையும், காலம் அளக்கும் கருவிகளையும் பயன்படுத்தி ஆராய்ச்சிக்குறிப்புகள் எடுத்து, முந்திய குறிப்புகளுடனும், திருத்தப்பட்ட நட்சத்திர அட்டவணையுடனும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு வந்தார்கள்.

விண்ணின் மீன்களை ஆராய்ச்சி செய்யும் இந்த மனிதர்கள், இடுகாட்டுப் புதைகுழியில் கிடக்கும் பிணங்களின் ஆவியோடு பேசியும், மத நம்பிக்கையற்றவர்களின் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தியும் வருவதாக எதிர்ப் பிரசாரம் செய்து வந்த நிசாப்பூர் முல்லாக்களுக்கு, இவர்கள் ஆராய்ச்சியின் வெற்றிச் செய்தி, வதந்தி வடிவாகப்போய்ச் சேர்ந்தது. இவர்களுடைய கூக்குரலைப்பற்றி உமாரும் மைமனும் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், உமார் மீண்டும் இயற்கையின் தன்மையைப்பற்றி ஏதேர் ஆராய்ச்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதை மைமன் உணர்ந்தான். அவன் எந்த விஷயத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுப்ட்டிருக்கிறான் என்று மைமனால் யூகிக்க முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அறிஞர் டோல்மியின் ஆராய்ச்சி முழுவதும், அவர் காலத்துக்கு முந்திய ஹிப்பார்க்கஸ் என்ற விஞ்ஞான மேதையின் ஞானத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்டவையே என்பதை உமார் உணர்ந்து கொண்டதால், அவனும், அறிஞர், டோலமியைப் போலவே, ரோட்ஸ் தீவின் விஞ்ஞானப் பேராசிரியனின் புத்தகங்களிலே தன் கருத்தைச் செலுத்தி வருவது மட்டும் தெரிந்தது. ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில், ஹிப்பார்க்கஸ் நூல்களைப் பயன்படுத்த உமார் முயற்சிக்கிறான் என்பதை மட்டும் அவர் யூகித்துக்கொண்டார். எந்த விஷயம்? அதுதான் புரியவில்லை.

“என்ன ஒரேயடியாக ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டார்?” என்று இஸ்பிகாரி ஒருநாள் கேட்டான்.

“இதுதான் புரியவில்லை. கிரகணத்தில் ஏற்படும் நிழலின் வடிவத்தைப் பற்றியதா இருக்குமோ என்று நினைக்கிறேன். எல்லையில்லாது செல்லும் எண்களைப் பயன்படுத்தித் தீர்க்க வேண்டிய வளைவுகளைப்பற்றிய பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் என்றுதான் எண்ணுகிறேன்!” என்று மைமன் சொன்னான்.