பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

ஆசியா முழுவதையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்தில் உலகம் முழுவதும் தன் ஆட்சியைப் பரப்ப வேண்டுமென்று மனக் கோட்டை கட்டினான். ஆனால் நம் பேராசிரியர் உமாரை விடக் கொஞ்சம் கூடுதலான வயதாகும் பொழுது, இளமைக் காலத்திலேயே அதிகமான குடிமயக்கத்தில் செத்துப்போனான். அவனுடைய அமீர்கள், தங்களுக்குள்ளேயே அந்தத் தேசங்களைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒருவரோடொருவர் பொருதி, அந்த சாம்ராஜ்யத்தைச் சின்னாபின்னமாக்கிக் கெடுத்தார்கள். இப்பொழுது, அந்தக் கிரேக்கர்களையெல்லாம் சாய்த்து விட்டு நம்முடைய இஸ்லாமியப் பெரும் வீரர்கள் வந்து விட்டார்கள். கிரேக்கர்களின் கற்பனைகளால் சிறிதும் பயனில்லை” என்று இஸ்பிகாரி ஒரு பெரிய சொற்பொழிவே நிகழ்த்தினான்.

“ஒன்றுமில்லாத சைபருக்கப்பால் பெரிய பெரிய எண்கள் இருப்பதாக உமார் சொல்லுகிறாரே! அவரே, அந்த எண்களைப் பயன்படுத்திக் கணக்குகள் செய்கிறாரே!” என்று மைமன் விளக்கினான்.

“பெரிய முல்லாக்களின் காதிலே இந்த விஷயம் எட்டிவிடாமல் அல்லாதான் அருள் புரிய வேண்டும்” என்று கூறிவிட்டுப் போன இஸ்பிகாரி, தன் உதவியாளர் குறுக்கே வந்ததுமே, “உண்மையின் அத்தாட்சி மறுபடியும் குடிமயக்கத்தில் ஆழ்ந்து விட்டது! நட்சத்திரங்களின் மத்தியிலே ஒரு வளைவிலே ஏறிச் சென்று, செத்துக் கிடக்கும் எண்களின் ஆவிகளை ஆட்சி செலுத்துகிறார் ஆசிரியர் உமார்” என்று கூறினான்.

“ஆம் ஒருநாள் இரவு, புதைகுழிகளின் நடுவே சென்று அவர் உட்கார்ந்ததை நான் பார்த்தேன்” என்று அவர்களிலே ஒருவன் கூறினான். அந்த ஆண்டும் இறுதிக் கட்டத்தை அடைந்தது. கடைசிக் குறிப்புகள் முழுவதும் பதியப் பெற்ற பிறகு, உமாரும், மைமனும் உட்கார்ந்து, முடிவான, துல்லியமான, மிகமிகச் சரியான பஞ்சாங்கம் ஒன்றைக் கணக்குச் செய்து தயாரித்தார்கள்! அவர்களுடைய கண்டுபிடிப்பின்படி, ஓர் ஆண்டுக்கு 365 நாட்களுடன் 5 மணி 48 நிமிடம் 45 நொடி கால அளவு காணப் பட்டது. இன்று நாம் பயன்படுத்துகிற பஞ்சாங்கத்தைக் காட்டிலும் இது சரியான, கணக்கேயாகும்.