பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211

இதன்படி, 365 நாட்களுடன், 33 ஆண்டுகளுக்கொருமுறை 8 நாட்கள் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது, சூரிய வட்டக் கணக்கும், கடிகாரக் கணக்கும் மிகத் துல்லியமான முறையில் சரியாக இருக்க முடியும்.

இத்துடன், ஆண்டுகளின் அட்டவணையொன்றும், தயாரித்துப் பஞ்சாங்கத்தைப் பூர்த்தி செய்து, இவர்களுடைய முடிவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிசாம் அல் முல்க் அவர்களிடம் சமர்ப்பிக்கத் தயாரானார்கள். நிசாப்பூர்க் கோட்டையிலே யிருந்த உலக அமைப்பாளர் ஆகிய நிசாம் அல் முல்க் அவர்களின் திருமுன் தங்கள் புதிய பஞ்சாங்கத்தைச் சேர்ப்பதற்கு, பாக்தாத் கணிதப் பேராசிரியர் மைமன் அவர்களும், உர்கண்டு ஆராய்ச்சிக் கழகத்துப் பேராசிரியர் முசாபர் அல் இஸ்பிகாரி அவர்களும், தங்களுடைய பட்டங்களுக்குத் தகுந்த அரசியல் உடையலங்காரத்துடன் சென்றார்கள். தங்க முலாம் பூசிய எழுத்துக்களால் மினுமினுக்கும் பஞ்சாங்கப் பிரதி யொன்றைப் பறக்கும் நாகப் படம் பின்னப்பட்ட பட்டுத் துணிப் பைக்குள்ளே வைத்து நிசாம் அவர்களிடம் கொடுத்தார்கள். இதைத் தானே நேரடியாக சுல்தான் மாலிக்ஷாவிடம் அளிப்பதற்காக நிசாம் புறப்பட்டுச் சென்றார்.

“கீழ் நாடுகளுக்கும் மேல்நாடுகளுக்கும் தலைவரான எம் பேரரசரே! தங்களுடைய திருக் கட்டளையின் படி, தங்கள் பணியாளர்கள், காலத்தை அளந்து விட்டார்கள். இதுவரை உலகத்திலே கணிக்கப்பட்டு வந்த பஞ்சாங்கங்கள் எல்லாம் பிழையுடையன என்றும், தங்களுடைய சீரிய ஆட்சியிலே நிலைநிறுத்தப் படுகின்ற இந்தப் பஞ்சாங்கம் ஒன்றே சரியானதென்றும், நிலை நிறுத்தப் பெற்றது! அளவற்ற அருளாளரான அல்லா, உலகத்திலே மனித இனத்தை உலவ விடும், எல்லையில்லாத காலம் வரையிலே, என்றென்றும் சரியான அளவினைக் காண்பிக்கும் இந்தப் புதிய பஞ்சாங்கத்தை - தங்கள் திருவுளத்தின் பெரு விருப்பத்திற்கிணங்கத் தயாரிக்கப்பட்ட இந்தச் சரியான அளவு முறையை - வழக்காற்றில் கொண்டு வரக்கூடிய உரிமையுடைய தங்கள் திருமுன் படைக்கிறேன்!” என்று கூறி நிசாம் அல் முல்க் அவர்கள் சுல்தான் மாலிக்ஷா அவர்களின் கைகளிலே அதை