பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216


கூடிய சக்தியும் அவனுக்கு உண்டு. “இப்பொழுது சுற்றுவதுபோல தெரியவில்லை, ஆனால், அவை மிக மிக மெதுவாகச் சுற்றுகின்றன. ஒவ்வொரு நாளும் அவை பூமியைச் சுற்றுகின்றன. அதைநான் முன்பு கவனித்திருக்கிறேன்!” என்று கூறினான்.

“சரி, நம்முடைய பூமி, என்ன செய்கிறது? இதைப்பற்றி நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய்?”

“இதோ இந்தப் பூகோள உருண்டைபோல, இது, ஒருபந்து, எல்லாக் கோளங்களுக்கும் மத்தியில் இது இருக்கிற்து. அல்லாவின் ஆணைப்படி, இது ஒன்றே அசையாமல் இருக்கிறது, மைமன் எனக்குச் சொல்லி யிருக்கிறார்.”

உமார் இதைக் கேட்டான், கீழே ஆற்றோரத்தில், இரவுப் பறவைகள் இறக்கையடித்துப் பறந்து கொண்டிருந்தன. ஓர் ஆந்தை, அமைதியாக அவர்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று அவர்களுடைய முகத்தில் சிலு சிலுப்பை உண்டாக்கி வீசிக்கொண்டிருந்தது.

“ஜபாரக், இரண்டு வருடங்களாக இவற்றைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உழைத்தேன். அந்த ஆராய்ச்சியின் பலனாக நான் அறிந்து கொண்ட விஷயத்தைச் சொல்கிறேன், கேள்.

அதோ அங்கே சிறுசிறு புள்ளிகளாகத் தெரிகின்றனவே, நட்சத்திரங்கள்! அவை இருந்த இடத்திலேயேதான் இருக்கின்றன. அவை அசைவதேயில்லை. எத்தனையோ ஆண்டுகளாக அவை அங்கேயே தூரத்திலேயே நிலையாக இருக்கின்றன. என் அன்புக்குரிய மூடனே, கேள். இந்தப் பூமிதான், நாம் நிற்கிறோமே இந்தப் பூமிதான் ஓர் இரவும் பகலும் சேர்ந்த ஒருநாளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. மேலே பார், அந்த நட்சத்திரங்கள் சுற்றுவதேயில்லை!”

திடீரென்று ஜபாரக் உடலிலே நடுக்கங்கண்டது. அவனுடைய தலை ஒரு மாதிரியாகச் சாய்ந்தது. “தலைவரே! எனக்குப் பயமாக இருக்கிறது” என்று கூவினான்!

“எதற்காகப் பயப்படவேண்டும் ! எதைக் கண்டு பயப்படுகிறாய்?” என்று கேட்டான் உமார்.