பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

வியாபாரி ஒருவன் ஏலம் போட்டுக் கொண்டிருந்தான். ஏலங் கூவுகிறவன், வெண்கல மணியொன்றை அடித்துக் கொண்டே கூவினான்.

“பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம் - அன்பும் அருளும் உடைய ஆண்டவனின் பெயரால் ஏலம் ஆரம்பிக்கப்படுகிறது. குடிமக்களே, கோமான்களே சீமான்களே!” என்று தொண்டை கிழியக்கூவினான். அவன் குரலில் ஒருவேகம் சிறகடித்தது! மானை விலைகூறும் திறமை அது!

பிரபுக்களும், வியாபாரிகளும், கனவான்களும் தனவான்களும் உழவர்களும் குடிமக்களும் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்காக அடிமைகளையும், ஆசைக்கிளிகளைத் தேடும் பருவமான்களைப் பிடிக்கக் கோமான்களும் ஏலம் எடுக்க அங்கே வந்து கூடினார்கள். கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு கூடியிருந்ததால், ஏலம்போடும் கம்பத்தின் அருகிலே, இடம் ஒதுக்குவது அந்த அடிமை வியாபாரிக்குக் கஷ்டமாக இருந்தது. கம்பத்துக்குப் பின்னாலே அவன் கொண்டு வந்திருந்த அடிமை ஆண்களும் பெண்களும் குழுமி இருந்தார்கள்.

கம்பத்தின் முன்னேயிருந்தமேடையின்மேல் முதல் ஏலப்பொருளாக ஒரு சிறுவனைக் கொண்டுவந்து நிறுத்தினான்.

“பிரபுக்களே! இதோ இந்தக் கிரேக்கப் பையனுக்குப் பதினான்கு வயாதாகிறது. பலம்பொருந்திய உடற்கட்டுள்ளவன். எல்லாப் பற்களும் இருக்கின்றன. நோயும் காயமும் இல்லாத அழகிய உடல், வீணை வாசிக்கப் பழகியவன். இஸ்லாத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறான். இவனுடைய விலை முப்பது பொன்கள்! யாருக்கு வேண்டும்?” என்று கூவினான்.

யாரும் பதில் சொல்லவில்லை.

“இருபத்தைந்து”

எவரும் கேட்கவில்லை.

“இருபது பொன்கள்!”

“இந்த விலைக்குக் கூர்டியக் குதிரை கூடக் கிடைக்காது” என்று கூறி, அசையாமல் நின்ற அந்தப் பையனின் ஒரு கையைத்