பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223


அவனுக்கு பத்தாண்டுகளுக்கு முன் இறந்த தன் ஆசைக் காதலி யாஸ்மியின் நினைவு வந்தது, அந்தக் கருவிழிகளில் தன்னுடைய யாஸ்மியின் விழிகளைக் கண்டான். அப்படியே தன்னை மறந்து பித்துப் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான்.

ஏல வியாபாரி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்தான். அவளுடைய தோளை உலுக்கிக் கொண்டே, “பெட்டைச் சிறுக்கியே; போ! உன் இடத்துக்கு” என்று எரிந்து விழுந்தான். பிறகு, உமாருக்குச் சலாம் இட்டு, “குவாஜா அவர்களே, தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் இந்தச் சிறுக்கியின் குணம் அப்படி” என்றான் ஒருவிதத் தாழ்மையோடு.

அயீஷா, இன்னும் குதிரைச் சேணத்தை விடாமல் பிடித்த பிடியாக நின்று, தன் வழுவழு கன்னத்தை உமாரின் முழங்காலிலே, தேய்த்துச் சாய்த்துக் கொண்டிருந்தாள்.

“அவளுடைய விலை என்ன? எதுவாக இருந்தாலும் அவளுக்காக நான் நூறு பொன் தருகிறேன்!” என்றான் உமார். ஒருவித ஆசைக் கிறுகிறுப்போடு.

ஏல வியாபாரி, குவாஜாவின் பலவீனத்தைப் புரிந்து கொண்டான். இந்த விலையைக் கேட்டதும், மனங்குளிர்ந்து போய் விட்டது. இந்த விலைக்கு எந்த அழகுப் பெண்ணையும் விற்கக்கூடிய சந்தை நிலவரமில்லை என்பதையும் அவன் அறிவான். அப்படியிருக்க இந்தச் சோனியை இந்த லாபத்தோடு நிறைவு காண அவன் மனம் எண்ணவில்லை. பலவீனத்தைப் புரிந்த அவன் லாபம் அடைய வேண்டும் என்ற பேராசை கொண்டான்.

மேடையைச் சுற்றியிருந்த கும்பல் உமாரைச் சுற்றிக் கொண்டது. அந்தக் கும்பலிலே இருந்த தன்னுடைய கையாள்களுக்கு, ஏல வியாபாரி கண்சாடை காட்டினான். கண் சாடையைக் காட்டி அவர்களை விலையை உயர்த்தும்படி உணர்த்திவிட்டுக் கும்பலைப் பார்த்துப் பேசத் தொடங்கினான். “அல்லாவின் திருவருளில் அழியாத நம்பிக்கை கொண்டவர்களே! அழகில் ஒப்பும் உயர்வுமற்ற இந்த இளம் பருவப் பெண்ணுக்கு நூறு பொன்தான் விலையா? மின்னல் கொடி போன்ற இடையும் புள்ளிமான்போல் மருண்டு நிற்க இந்தப்புது மானின் அள்ளும் பார்வையையும் குயில் போன்ற குரலும், புல்புல் பாடகி போன்ற இசை நுட்பம் கொண்டு,