பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229


இப்படியாக ஆயிஷா எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சுலெய்க்கா மேலும் அரசாங்க விருந்துகளைப்பற்றிக் கூறத் தொடங்கினாள். ஆயிஷா, தன் அடுப்படி விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாத அவள், வந்தது முதல் அடுப்படியில் தலையிட நினைக்கவில்லை என்று அறிந்து கொண்டபடியால், இப்பொழுது மிக தாராளமாகப் பேசத்தொடங்கினாள். “இதோ பார், சின்ன எறும்பின் புற்றிலே ஒரு நீர்த்துளி விழுந்தாலும், அது வெள்ளப் பெருக்காகத் தோற்றமளிக்கும். ஆனால், அங்கே அரண்மனையிலே விருந்து நடக்கும் பொழுது இராட்சதர்களுக்காகப் போவதுபோல மது குடங்குடமாகப் போகும் வறுத்த புறாக்கறியும், மான்கறியும், சோறும், கூழும், பழவகைகளும் அதுவும் இதுவும் எத்தனை எத்தனையோ? அரண்மனை விருந்தென்றால் சொல்லவா முடியும்? எவ்வளவு போனாலும், அங்கே சிறுதுளிபோலத்தான்! நன்றாக விருந்து சாப்பிட்டுவிட்டு, இரவிலே பேசத் தொடங்குகிறவர்கள் விடிந்து நட்சத்திரங்கள் மறைகிற வரையிலே பேசிக் கொண்டே யிருப்பார்கள்!”

“ஆமாம்! பெண்களை விருந்துக்கு அழைக்கமாட்டார்களே? பெண்கள் இல்லாவிட்டால் என்னதான் அப்படி விடிய விடியப் பேசுவார்கள்?”

“அதென்ன அப்படிக் கேட்கிறாய்? பேசுவதற்கா அவர்களுக்கு விஷயமில்லை? என்னென்னவோ கொள்கைகள், கோளங்கள், கீளங்கள் என்று பேசுவார்கள். அதெல்லாம் மிகச் சக்தியுள்ள சொற்கள். என் மூளைக்கு எட்டாத விஷயம்!”

சுலெய்க்கா சொல்லும் இந்த அதிசயமான விஷயங்களெல்லாம் தனக்குப் புரியவில்லை என்கிறபோது, அரசாங்க விஷயங்கள் மூளையைக் குழப்பத்தான் செய்யும் என்று அயீஷா நினைத்தாள்!

பொதுவாகத் தன் இனத்துக்கும்; இந்தப் பாரசீகர்களுக்கும் மிகுந்த வேற்றுமை இருக்கிறதென்பதைத் தெரிந்துகொண்டாள். பாரசீகர்கள் எல்லோருமே அரைக் குருடாக இருக்கும் அரண்மனை வாசல் காவல்காரன் முதல் - அடிக்கடி வெள்ளைக் கழுதையின்மேல் ஏறிவரும் கூனல் முதுகன் வரை - அனைவரும் தாங்கள் வேலை செய்வதைக் காட்டிலும் அதிகமாகத்