பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


தூங்குகிறார்கள் - தூங்குவதைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகிறார்கள் - அந்த வகையிலே இந்த சுலெய்க்காவும் சேர்ந்தவள்தான் - இவர்களையெல்லாம் சவுக்கடி கொடுத்து வேலை வாங்குவதற்கு ஒரு கண்காணி இருந்தால் தேவலை என்று அயீஷா எண்ணினாள்.

அந்தத் தோட்டத்தில் வேலைசெய்வதற்குத் தோட்டக்காரர்கள் மட்டும் இருபதுபேர் இருந்தார்கள்! இருந்தும் அவர்கள் பெரும்பாலும் கூட்டமாக உட்கார்ந்து தோட்ட வேலைகளைப் பற்றியும் தங்களைப்பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, வேலை பார்ப்பது இல்லை. அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்பார்கள். ஒருவன் அந்த இடத்தைக் கொத்திப்போடு என்பான், மற்றொருவன் அது என் வேலையல்ல. அகமதுவின் வேலை என்பான். அகமது எங்கே என்றால், உடம்புக்கு முடியவில்லை, வேலைக்கு வரவில்லை என்பான். கொத்திப் போடாவிட்டால், தலைவர் கோபப்படுவாரே என்றால், நானே கொத்துகிறேன், இன்று என்னைத் தொந்தரவு செய்யாதே நாளைக்குச் செய்து விடுகிறேன் என்பான். ஆனால், நாளை அவன் வந்து வேறொருவனை ஏவுவான்.

இப்படியாகப் பேசிப் பேசிக் கழித்துவிட்டுக் கடைசியாகச் சிறிது நேரம் ஏதாவது வேலைசெய்வார்கள். உடனே களைப்பு வந்து விடும். ஒடைக்கரையில் உள்ள குளிர்ந்த மரநிழலில் துண்டை விரித்துப் போட்டுத் தலைக்குக் கையை வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இவற்றையெல்லாம் இந்தச் சிறுத்தைக் குட்டி உப்பரிகை மேலேயிருந்து பார்த்துக்கொண்டேயிருப்பாள். அயீஷாவை அடிமைச் சந்தையிலிருந்து, அரண்மனைக்குக் கூட்டி வந்த வேலைக்காரன் அவளுக்குச் சிறுத்தைக்குட்டி என்று பெயர் வைத்தான்! ஆகவே வேலைக்காரர்கள் அவளைக் குறிப்பிடும்போது சிறுத்தைக்குட்டி என்றே கூறுவார்கள்.

கவனிக்காமல் கிடந்தாலும் தோட்டத்திலே ரோஜாச்செடி நன்றாக அடர்ந்து படர்ந்து கிடந்தது. அந்தப் படுகையின் நிழலிலே படுத்து அறைகுறையாகத் தூங்குவதிலே அவளுக்கு