பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

கதைகளை யெல்லாம் கூறினான். ஆயீஷாவுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. உமார் பக்கம் திரும்பிக் கவனித்தாள். அவன் இந்த வேடிக்கைகளுக்காகச் சிரிக்கவும் இல்லை; அதை விரும்பிக் கேட்டதாகவும் தெரியவில்லை. வெறுத்ததாகவும் தெரியவில்லை. மூஇஸ்ளலியை அவள் மனதார வெறுத்துச் சபித்தாள்.

அங்கு அடிக்கடி வரும் மற்றொருவன் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அவன் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. நிழலைப் போன்ற அமைதியான போக்குடையவன். உமாருக்கு உயிர் போன்ற நட்புடையவன் அந்த இந்தியன் என்று ஆயீஷா அறிந்து கொண்டாள். அஞ்சாத பார்வையுடைய அந்த இளைஞன், தன் தோளிலே ஒட்டக மயிர்க்கம்பளித் துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு, எப்பொழுதும் கால்நடையாக அரண்மனைக்கு வருவான். அவனை அங்குள்ளவர்கள் வேதாந்தி காசாலி என்று கூறுவார்கள். காசாலி என்ற பெயருடைய அவன் ஒருநாள் அருகில் இருந்தவனிடம், உமாருக்கு இருந்த அந்தரங்க ஞானமானது, அவனுடைய பழம்பிறப்பின் காரணமாகத் தொடர்ந்து வந்ததென்றும். தன்னை அறியாமலே உமார் அந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறானென்றும் கூறினான். காசாலியும் உமாரும் பேசும்போது, இருவரும் தோட்டத்தில் உலவிக்கொண்டே பேசுவார்கள்.

ஆகையால், அவர்கள் பேச்சு முழுவதும் ஆயீஷாவுக்குக் கேட்காது! அரைகுறையாக ஒரு நாள் அவர்கள் பேச்சு காதில் விழுந்தது இதுதான். உமார் சொர்க்கத்தை நாம் அப்படியே பார்க்க முடிந்தால் புதியதோர் உலகத்தை அங்கே காணலாம். இல்லையா? நமது பழைய உலகத்தை உதறித் தள்ளிவிட்டு, இதயம் விரும்பும் அந்தப் புதிய உலகத்தைக் காணலாம்.

காசாலி:- ஆண்டவனுடைய பக்தியில் நாம் முழுக்க முழுக்க ஈடுபடு முன்பே சொர்க்கத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மாயத்திரை விலகாது! நாம் சொர்க்கத்தைக் காணவேண்டுமானால், பக்தியில் மூழ்க வேண்டும்.

இப்படி அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே உமார் ஒரு மதுக்குவளையை எடுத்துக் குடிப்பதற்காக வாய் அருகிலே கொண்டு போனான்.