பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

பேச்சை நிறுத்திவிட்டு அவன் மீது கவனம் செலுத்தினார்கள். “அன்பர்களே! இந்தக் கழுதை உங்களுக்கு எச்சரிக்கையாக விளங்குகிறது. ஏனென்றால், முந்திய பிறப்பிலே, ஒரு பல்கலைக் கழகத்துப் பேராசிரியராக இருந்து, உங்களைப் போல பல விஷயங்களை விவாதித்ததன் பயனாக இது இந்தப் பிறப்பிலே கழுதையாகப் பிறந்து விட்டது.” என்று கூறி அவர்களை அவமானப் படுத்தி விட்டான். அதனால் அவர்கள் எல்லோரும் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்கள். தோட்டத்திலே, விண்மீனின் ஒளிவீசும் இரவு நேரத்திலே, உமார் உலவிக் கொண்டிருந்தான். தன்னந்தனியாக இருந்த அவனை நோக்கி அன்னநடை போட்டு வந்தாள் ஆயீஷா!

அவன் எதிரிலே அவள் மண்டிபோட்டு, அவன் கையைப் பிடித்துத்தன் நெற்றியிலே ஒற்றிக் காண்டு, “தலைவரே! தங்களுக்குச் சாந்தியுண்டாவதாக!” என்று வாழ்த்தி வணங்கினாள்.

“சாந்தி! சாந்தி! உனக்கும் சாந்தி உண்டாகட்டும்!” என்று உமார் பதிலுக்கு வாழ்த்தினான்.

“தலைவரே! சற்றுமுன் தரையோடு தரையாக நகர்ந்து வந்து ஒருவன் தங்கள் நடவடிக்கைகளை உளவு பார்த்தான். அதோ அந்த ரோஜாச்செடிகளுக்குப் பின்னால் அவன் ஒளிந்திருந்தான். இப்பொழுது அவன் திரும்பவும் மறைந்து சென்றுவிட்டான். அவன் முகத்தையும் நான் கவனித்தேன்” என்று அயீஷா கூறினாள்.

“அது யார்? தோட்டக்காரன் அகமதுதானே?”

“ஆம் அகமதுதான்; அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்!” என்றாள்.

பாலைவனக் குடிமக்களிடையே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் அயீஷாவுக்கு, உளவு பார்ப்பவர்கள் என்றாலே பிடிக்காது. அவர்களைப் போல் பகைவர் உலகில் வேறு யாரும் இல்லை என்பதும், அவர்களைக் கண்டால் நச்சுப்பாம்பைக் கொல்வது போல், தண்டித்து அனுப்ப வேண்டும் என்பதும் அவளுடைய எண்ணம்!