பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239


ஆனால், உமார், “அவன் பிழைத்துப் போகட்டும். அவனை யார் அனுப்பினார்களோ, அவர்களிடம் சென்று கழுதை விஷயத்தைச் சொல்லட்டும். நான் இன்று அவனை அடித்துத் துரத்தி விட்டால் அவர்கள் மறுபடியும் அகமதை விட ஆபத்தான மற்றொருவனை அனுப்பக்கூடும்” என்று சொன்னான்.

அயீஷாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. தான் சொல்லுவதற்கு முன்னாலேயே, அவன் அகமது உளவு பார்ப்பதைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறான். தான் அவனிடம் பானு சாபாத் தலைவன் மகள் என்று கூறியதைக் கூடப் பொய்யென்று, தெரிந்து கொண்டு விட்டானே? அவனுடைய மாயவித்தை பெரியதுதான். தான் அவனருகில் மண்டியிட்டு, அவன் தன் தலையில் கைவைத்த பொழுதுகூட, அவன் தன் எண்ணத்தைத் தெரிந்து கொண்டுதான் இருக்கவேண்டும் என்று அயீஷா எண்ணினாள். ஆனால், உமார் தன் போக்கிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தான். “அவர்கள் சொர்க்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் நொடி நேர இன்பத்தைத் தவிர வேறு சொர்க்கம் என்று என்ன இருக்கிறது?” அவனுடைய மெளனத்தின் காரணம் தெரியாமல் ஆயீஷா தானும் பேசாமல் நின்றாள்.

“இந்தத் தோட்டம் அமைதியாகவேயிருக்கிறது. ஆனால் இங்கும் தேடிக்கொண்டு வருபவர்களும், பேச வருபவர்களும், வேவு பார்ப்பவர்களும் வந்து அமைதியைக் குலைத்து விடுகிறார்கள் ஆயீஷா! உன்னிடம் என் வேலைக்காரர்கள் அன்பாக நடந்து கொள்கிறார்களா?”

“ஆம்! தலைவரே. வீணையை எடுத்துக் கொண்டு வந்து நான் பாடவா? தாங்கள் என் பாட்டைக் கேட்கிறீர்களா?”

“மிக நேரமாகி விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பொழுது விடியத் தொடங்கி விடும்! நீ போய்த் தூங்கு.”

பணிவுடன் ஆயீஷா தன் அறைக்குச் சென்றாள். இத்தனை நடவடிக்கைகளுக்கிடையில் அவர் தன்னை எங்கே கவனிக்கப் போகிறார் என்று தோன்றியது.

ஒரு பெண்ணிடம் பழகுகிற மாதிரியாகவா இருக்கிறது அவர் போக்கு? ஏதோ குதிரையைத் தட்டிக் கொடுப்பதுபோல்