பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தலையிலே கைவைத்தார். இப்பொழுது, குழந்தைக்குச் சொல்வது போல் தூங்கப் போகச் சொல்லுகிறார் என்று எண்ணி ஏங்கினாள்.

உமார், தனியாக அந்தக் குட்டையின் அருகிலே உட்கார்ந்துகொண்டு, தன் சிந்தனையை ஓட விட்டான். அவன் நினைப்பிலே முதலில் வந்து நின்றவன், காசாலிதான். காசாலி, வேதாந்தி - ஆனால் இளைஞன். உமார், ரஹீமுடன் போர்க் களத்திற்குச் சென்ற போதும், யாஸ்மியிடம் ரோஜாப்பூ வாங்கிய போதும் எத்தனை வயதுடையவனாக் இருந்தானோ அத்தனை வயதுதான் இப்பொழுது காசாலிக்கு இருக்கும்! காசாலியின் வயதுக்கு அவனிடம் இளமை பொங்கிப் பூரித்து நிற்கிறது. ஆனால், அந்த இளமை ஏன் வீணடிக்கப்பட வேண்டும்? உமாருக்கு இப்பொழுது வயது முப்பத்தினான்குதான் இருக்கும். ஆனால், அவனிடமிருந்து இளமை பறிபோய் விட்டதாகத் தோன்றியது. இளமையின் இன்ப வாழ்வு என்ற அந்தப் புத்தகம் அவனைப் பொறுத்த வரையில் மூடப்பட்டதாகி விட்டது. இப்பொழுது வேறு புதிய புத்தகம் திறக்கப்பட்டிருக்கிறது. காசாலிக்கு வாழ்க்கை உறுதி பயப்பதாயிருக்கிறது; ஆனால் உமாருக்கோ நிலைகுலைந்து போயிருக்கிறது. புலனடக்கம் உள்ள அந்த வேதாந்திக்கு வாழ்க்கை விரித்து வைக்கப்பட்ட தேசப்படம் போல் விரிந்து காணப்படுகிறது. ஆனால், தன்னைப் போன்ற வான நூற்கலைஞனுக்கு, வாழ்வில் தடைக்கு மேல் தடை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

காசாலி, பெரிய ஆசிரியராகத் திகழ முடியும், என்னால் அப்படியிருக்க முடியாது.

இப்படி ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவன் திடீரென்று, கைதட்டி ஓர் ஆளைக் கூப்பிட்டான். வேலைக்காரன் ஒருவன் வேகமாக ஓடி வந்து சிறிது தூரத்தில் மரியாதையுடன் நின்றான். “என்னுடைய அறைக்குள்ளே பட்டுத் துணிகள் அடுக்கி வைத்திருக்கும் இடத்திற்குப் பக்கத்திலே என்னுடைய ரத்தினப் பெட்டியிருக்கிறது. அதை எடுத்துவா” என்றான். அந்த ஆள் போகுமுன் அவனை நிமிர்ந்து பார்த்த உமார் திடுக்கிட்டான். அவன் அகமது!