பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241


அவன் பெட்டியைக் கொண்டு வந்தான். அதன் பூட்டைத் திறந்து அதில் உள்ள பொருள்களைப் பார்வையிட்டான். “வேறு எதுவும் வேண்டுமா?’ என்று அகமது கேட்டான். “இல்லை நீ போகலாம்” என்று சொல்லிவிட்டு, அதிலே இருந்த பழைய நாணயங்களைப் பார்த்தான், உமார். அவ்வப்போது தனக்குக் கிடைத்த பழைய நாணயங்களை அதில் சேர்த்து வைத்திருந்தான். அவைதாம் எத்தனையெத்தனை சரித்திர நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகின்றன. அந்த நாணயங்களிலே காணப்பட்ட உருவங்களையுடைய அரசர்களெல்லாம், இப்பொழுது செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டிருப்பார்கள். சிலச் சிலருடைய அரசாட்சி ஆட்டங்கண்டு விட்டது. சில தேசங்கள், பெருமைக்குரிய நம் பேரரசரான மாலிக்ஷாவின் ஆட்சியில் வந்து சேர்ந்திருக்கின்றன. வெற்றி முழக்கமிட்டு வரும் இஸ்லாமியப் பேரரசின் ஆட்சியிலே தடைபட்டுக்கிடக்கும் மேல்நாடுகள் எத்தனை?

அவருடைய ஆட்சியிலே, நிசாம் அல்முல்க் அவர்களின் ஆணைப்படி, இதுவரை அவன் ஒரே சமயத்தில் மூன்றுபேர் செய்யக் கூடிய வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறான். இன்னும், முன்னைக் காட்டிலும் அதிகமான உழைப்பை அவர் எதிர்பார்க்கிறார். நிசாம் நினைவு வந்ததும், அவனுக்கு இந்தப் பெட்டியை அகமது தூக்கி வர நேர்ந்தது பற்றி வருத்தம் தோன்றியது. அகமதுவின் தோற்றம், அவன் தன்னை வேவுபார்க்கிறான் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. இந்த வேவு பார்ப்பதிலிருந்து விடுதலை பெற முடியாதா? ஒரு பக்கம் நிசாமின் ஒற்றர்கள் மற்றொரு பக்கம் அவருடைய எதிரிகளின் உளவாளிகள். இப்படித் தன்னைச் சுற்றி எப்பொழுதும் உளவாளிகளே உலாவிக் கொண்டிருந்தால், தான் எப்படிச் சுதந்திரமாக இருக்க முடியும்? என்றெல்லாம் உமாரின் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும்போது,

மற்றொரு வேலைக்காரன் வந்து ஏதோ கேட்டான்.

“இப்பொழுது, எந்தக் கடிதமும் பார்க்க முடியாது, எனக்கு எந்த விதமான உணவும் இப்போது தேவையில்லை. இஷாக், இந்தப் பெட்டியைக் கொண்டு போய் உள்ளேவை. தோட்டத்துக்குள்ளே யாரும் வராமல் பாதுகாத்துக்கொள்!”