பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250


வெளியில், நடைபாதையில் வந்து பார்த்த உமார் யாரோ ஒரு புதிய ஆசாமி, கதவின் ஓரத்தில் சுவர் அருகிலே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவன் கரிய உருவமும் சிவப்பு ஆடையும் அணிந்திருந்தான். உமாரைக் கண்டதும் எழுந்து மரியாதையுடன் சலாம் செய்தான்.

“நீ யார்?”

“ஏழைகளின் பாதுகாவலரே! என் பெயர் சாம்பல் ஆகா. இங்கு பணி செய்வதற்காக இஷாக் என்னை அனுப்பினார்.”

தடித்த குரலும் அருவருக்கத்தக்க பார்வையும் உடைய அவனைக் கண்டதும், அயீஷாவின் வெறுப்புக்குக் காரணத்தைப் புரிந்துகொண்டான் உமார்.

“என்னோடு வா” என்று அவனை அழைத்துக் கொண்டு, வெளிவாசலுக்கு வந்தான். அங்கே நின்ற இஷாக்கை அருகில் அழைத்தான். அவன் அன்று வாங்கிய அடிகாயத்துக்குப் போட்ட கட்ட கட்டு அப்படியே இருந்தது.

“அந்தப்புரத்திற்குக் காவலாள் வைக்க வேண்டுமென்று நான் உனக்கு எப்பொழுது கட்டளையிட்டேன்?”

“தலைவர் அவர்களுடைய கவனம் வேறு எங்கோ இருப்பதை அறிந்து கொண்ட நான், அவசரத் தேவையை முன்னிட்டு, இவனைக் கொண்டு வந்து வேலையில் சேர்த்தேன்!”

“சரி, இவனைத் திருப்பியனுப்பிவிடு”.

“தலைவரே! மன்னிக்க வேண்டும். தோட்டம் பெரியது. தோட்டம் முழுவதையும் அரண்மனையில் இருந்த படியே பார்த்துக் கொள்ள முடியாது.”

“நீ அவனை வெளியேற்று!”

சாம்பல் ஆகா என்ற அந்த மனிதன் தன் தோட்டத்தில் காவல் இருப்பது என்பதை நினைக்கவே உமாருக்கு அருவருப்பாக இருந்தது. மேலும் ஆயீஷா காவல் வைத்துக் கொள்ளக்கூடிய உயர்ந்த வகுப்பிலே பிறந்து வளர்ந்த்வ்ஸ் அல்ல. சுதந்திரப் பறவையாக இருக்க வேண்டிய அவளை உளவு பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர் ஆள் வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.