பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251


சாம்பல் ஆகாவுக்கு முன்னால் அவமானப் படுத்தப் பட்டோமே என்று நினைத்த இஷாக், தன்னுடைய தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக “நிசாம் அல்முல்க் அவர்களுடைய கடிதம் வந்து இருபது நாட்கள் ஆகின்றன. அது மிகவும் அவசரமானதென்று நான் தங்களுக்குப் பல முறை நினைவுபடுத்தியும் இன்னும் தாங்கள் பதில் எழுதவில்லை. நிசாம் அல்முக் அவர்கள், அரசாங்கம் சம்பந்தமான முக்கிய விஷயம் இருந்தால்தான் எழுதுவார். ஒரு தபால் குதிரை வீரன் அதைக் கொண்டு வந்தான், நான் அதைக் கொண்டு வரவா?” என்று பேச்சை மாற்றினான்.

உமார் கடிதம் வந்த விஷயத்தையே மறந்து விட்டான். உறையைக் கிழித்துப் படித்துப் பார்த்து விட்டு, அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.

“பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம். அளவற்ற அருளாளனும், நிகரற்ற கருணையும் உடைய அல்லாவின் பெயரால் சுல்தான் மாலிக்ஷா அவர்களுக்கு, தற்பொழுது கிரகநிலை சரியில்லாத காரணத்தால் நிசாப்பூருக்குத் திரும்பி வருவது நல்லதல்ல என்று ஒரு மணிநேரம் கூடச் சுணங்காமல் உடனே எழுதியனுப்பு. சாமர்க்ண்டுக்கும் வடக்கே தொடர்ந்து போர் நடத்திப் பெற வேண்டுவது இன்றியமையாததென்று நான் கருதுகிறேன். அவர் கொராசனுக்குத் திரும்பி வரவும், குளிர்காலத்தைக் கருதித் தம் படையில் பாதியைக் கலைத்து விடவும் எண்ணியிருப்பதாக அவருடைய முகாமிலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. உடனே எழுதவும்.”

மறுபடியும் உமார் கடிதம் முழுவதையும் படித்துப் பார்த்தான். படித்துவிட்டு உடனே அதைச் சுக்கு சுக்காகக் கிழித்தான். இது போன்ற ஒரு செய்தியை, எழுத்து மூலமாக அனுப்புவது எத்தனை தீமை விளைவிப்பது என்ப்து நிசாமுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நிசாமின் ஆணைப்படி பொய்யான ஒரு குறி சொல்லுவதை அவன் விரும்பவில்லை. நிசாம் அரசாங்கத்துக்காக உண்மையாக உழைக்கிறார் என்றாலும் கூட, மாலிக்ஷா அவசரமாக இருக்கும் போது, அவரை ஏமாற்றுவது ராஜத் துரோகம், சுல்தான் அவர்கள் கடந்த பல ஆண்டுகளைப் படையெடுப்பிலேயே செலவழித்திருக்கிறார். குளிர்காலத்தில் சற்று அமைதியாகவும் ஓய்வாகவும் இருக்க அவர் விரும்பினால், அதை ஏன் தடுக்க வேண்டும்?