பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252


நிசாப்பூரில் இருந்தால் உமார், இந்தப் பிரச்சினையில் வேறுவிதமான முடிவு கட்டும்படி நேர்ந்திருக்கும். ஆனால் அவன் காசாலியுடன், வேதாந்த விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறான். அயீஷாவுடன் இன்பம் அனுபவித்திருக்கிறான். இந்தச் சூழ்நிலையில் அவன் நிசாம் அவர்களின் திட்டத்தை ஒப்புக் கொள்ளுவதாக இல்லை. தாளும், அரக்கும் கொண்டு வரச் சொல்லி, உமார் அதில் ஒரே சொல்லில் “முடியாது” என்று பதில் எழுதி அதன் கீழே “கயாம்” என்று கையெழுத்திட்டு, மடித்து, அரக்கு முத்திரையிட்டு, அதை இஷாக்கிடம் கொடுத்து “ஒரு குதிரையில் உடனே நிசாப்பூரில் இருக்கும் நிசாமுக்கு இதையனுப்பு” என்றான்.

“முதல் அமைச்சர், ஒரு மதக் கலகத்தை அடக்குவதற்காக ரே நகருக்குப் போயிருக்கிறார்” என்று சாம்பல் ஆகா கூறினான்.

“அவர் எங்கேயிருக்கிறாரென்று கண்டு பிடித்து அங்கே அனுப்பு” என்று சொல்லிவிட்டுத் திரும்பியவன், மறுபடியும் நினைவு வந்து, “அகமதை அனுப்பாதே, வேறு யாரையும் அனுப்பு” என்று கூறிவிட்டுச் சென்றான். வீட்டை நோக்கி நடந்தவன், அங்கே வாசல் புறத்திலே எரிந்து கொண்டிருந்த நெருப்பின் பக்கமாகப்போனான். ஹசேன், அலி, அகமது ஆகிய மூவரும் அதைச்சுற்றியுட்கார்ந்திருந்தார்கள். உமார் வருவதைப் பார்த்ததும் எழுந்து நின்று சலாம் செய்தார்கள். உமார் தன் கையில் இருந்த கடிதத் துண்டுகளை நெருப்பில் போட்டு விட்டு, அவை யாவும் எரிந்து முடியும்வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வீட்டுக்குள்ளே சென்றான். மூன்று தோட்டக்காரர்களும் இதை ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்துவிட்டுக் கீழே உட்கார்ந்து அந்தப் புதிய விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.

“சந்தேகமில்லாமல் இது மிக மிக முக்கியமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும். என்ன அழகான கையெழுத்து!” என்று ஹசேன் கூறினான்.

“அந்த முத்திரை என்ன சிவப்பாக இருந்தது! நிசாம் அல்முக் அவர்கள் இது போன்ற முத்திரையைத்தான் உபயோகிப்பது வழக்கம். அது இரத்தத் துளிபோல் உருகியோடிக்கொண்டிருப்பதைப் பார்” என்றான் அலி.