பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253


சாம்பல்களுக்கிடையே அந்தச் சிவந்த அரக்குத் துளிகள் உருகிமறைவதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சிறிதுநேரத்திற்குப் பிறகு அகமது அங்கிருந்து, முட்டை கட்டிக் கொண்டிருந்த சாம்பல் ஆகாவிடம் போய்ச் சேர்ந்தான்.

ஆயீஷாவுக்கு எந்த விதமான குறையும் இல்லை. அவளுக்கு ஏதாவது வேண்டுமா என்று உமார் கேட்டபொழுது. சிறிது நேரம் சிந்தித்து விட்டு, உடை தைப்பதற்காகப் புதியபட்டுத் துணி கொஞ்சமும், அதிலே பின்னுவதற்காக வெள்ளிச் சரிகை கொஞ்சமும் புனுகும், அம்பரும் கூந்தல் எண்ணையும். வேண்டுமென்றாள். அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. மெருகு தீட்டிய தங்கத் தலைச் சரம் ஒன்றை அவன் அவளுக்குக் கொடுத்ததும், ஆனந்தத்தால் குதித்தாள். பிறகு அதைத் தலையிலே அணிந்து கொண்டும், கூந்தலை அதற்குத் தகுந்தபடி முடிந்து கொண்டை போட்டுக் கொண்டும். நெடுநேரம் வெள்ளிக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் அவனுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அப்படியே அவனருகில் சமுக்காளத்தில் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு தூங்கத் தொடங்கி விடுவாள். வீட்டிலேயிருந்த வேலைக்காரர்களான பாரசீகர்களைப் பற்றி அவள் சிறிது தாழ்ந்த கருத்தே கொண்டிருந்தாள்.

“எதைச் சொன்னாலும் நாளைக்கு நாளைக்கு என்றுதான் சொல்லுகிறார்கள். நேற்று நடந்ததைப் பற்றிப் பேசுவார்கள். வேலைகளை நாளைக்கு ஒத்திப் போடுவார்கள்” என்று உமாரிடம் கூறினாள்.

“இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அல்லவா?”

அயீஷா அதை நினைத்துப் பார்க்கவில்லை. அது உண்மைதான்! அவர்கள் எளிதில் அழுது விடுகிறார்கள். அதுபோலவே விரைவில் சிரித்தும் விடுகிறார்கள். அது ஒரு நல்ல தன்மைதான்.

“அயீஷா! நீ நேற்றைப் பற்றியும் எண்ணுவதில்லை; இன்றையப் பொழுதிலேயே எப்பொழுதும் வாழுகிறாய்!”