பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256


மூன்று நாட்கள் தொடர்ந்து உமார் ரே நகரம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான். இடையிடையே தூங்குவதற்காக விடுதிகளிலே தங்கிச் சென்றான். நிசாப்பூர் ஊருக்குள்ளே சென்றால் மக்கள் குழுமி வரவேற்பதும் வாழ்த்துரைப்பதுமாக நேரம் வீணாகி விடுமென்று அவன் ஊரைவிட்டு விலகியே சென்றான். இருப்பினும் கொரசான் மக்கள், கூட்டங்கூட்டமாக அவனைப் பார்க்க வந்து கூடினார்கள்.

மூன்றாவது நாள் இரவு தங்குவதற்காக வழியில் ஒரு விடுதியில் பயணத்தை நிறுத்தியபோது, கையில் பருந்துடன் வந்த ஒரு குதிரைவீரன் உமாரையணுகி சலாம் செய்தான்.

“குவாஜா அவர்களே, தங்கள் பயணம் வெற்றியடைவதாக! இதோ ஒரு முன்னறிவிப்புக் குறிப்பு இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே, தன்னுடைய இடுப்பில் சொசுகியிருந்த ஒரு வெள்ளிக் குழாயை எடுத்தான். அந்தக் குழாய் ஒரு பேனா அளவே இருந்தது. ஒரு மணிநேரத்திற்கு முன்னால் நான் என்னுடைய பருந்தைப் பறக்கவிட்டேன். ஆற்றை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு நாரையைப் பிடிப்பதற்காக நான் அதைப் பறக்கவிட்டேன். ஆனால் அது மேற்றிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு புறாவைப் பிடித்துக்கொண்டு வந்தது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் தங்களுக்குத் துன்பந் தர வேண்டுமென்று செய்தி கொண்டுபோன அந்தப் புறாவைப் பிடிக்கவில்லை. இந்தப் பருந்தைக் கொண்டு வேட்டையாடுவது என் தொழில். தங்கள் செய்தி தடைப்படுத்தப் பெற்றதற்கு என்னை மன்னிக்கவேண்டும். அதன் காலிலே கட்டியிருந்த குழாயும், அந்தக் குழாயில் வைத்திருந்த செய்தியும் இதோ இருக்கின்றன” என்று சொல்லி அந்தக் குழாய்க்குள் இருந்த இரண்டு விரற்கிடையளவுள்ள சிறுதாள் ஒன்றை எடுத்து உமாரிடம் கொடுத்தான். அதில் ஒரே ஒருவரி எழுதியிருந்தது. அது இதுதான்.

“கூடார மடிப்பவன் உமார் ரே நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.”

அதன் கீழே கையெழுத்துப் பதிலாக ஓர் எண் குறிப்பிடப் பட்டிருந்தது.