பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257


“இதனால் ஒன்றும் கெடுதலில்லை. நீ போகலாம்” என்று, என்ன சொல்வானோ என்று நின்றுகொண்டிருந்த பருந்துக்காரனிடம் கூறினான். “ஆம்! அந்தப் புறா மேற்குத் திசை நோக்கியா சென்று கொண்டிருந்தது?” என்று கேட்டான்.

“மறைந்து கொண்டிருக்கும் கதிரவனை நோக்கி அம்புபோல் பறந்து கொண்டிருந்தது. அந்தச் செய்தியைப் பார்த்தவுடன், தாங்களும் இங்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அல்லாவின் திருவுள்ளப் படியே எல்லாம் நடக்குமென்று எண்ணிக்கொண்டு தங்களிடம் வந்தேன்” என்று அவன் பதில் கூறினான்.

அந்தச் சிறிய வெள்ளிக் குழாயைத் தன் விரல்களினால் திருப்பிப் பார்த்துக்கொண்டே யார் இந்தச் செய்தியை அனுப்பி ருக்கலாம் என்று உமார் யோசித்தான். யாருக்காக அனுப்பப்பட்ட செய்தியாக இருக்கும் என்றும் தெரியவில்லை. அந்தப் புறாவிற்குத் தான் புறப்பட்ட இடமும், போய்ச் சேரவேண்டிய இடமும் நன்றாகத் தெரியும். ஆனால், அது பேசமுடியாது! அந்தக் குழாயிலிருந்து மிக மெல்லிய புனுகு நெடி வீசியது. அவன் ரே நகருக்குப் போவது, காசர்குச்சிக் அரண்மனை வாசிகளுக்கு மட்டுமே தெரியும். நிசாப்பூரில் அவன் நுழையாத படியால், அங்கு யாருக்கும் தெரியாது. நிசாம் அவர்களுடைய உளவாளிகள் முன் கூட்டியே அவருக்கு அறிவிக்கப் புறாவின்மூலம் செய்தியனுப்பியிருக்கலாம். எழுதியவன் முக்கிய எழுத்தைக் கொண்டே யார் எழுதியது என்றோ அதன் அடியில் உள்ள எண்ணைக்கொண்டோ, பெறுபவன் அவனை இன்னார் என்ற அடையாளங் கண்டு கொள்வான். எந்த வழியில் யோசித்தாலும், அதன் உண்மையை, அந்தச் செய்தியின் பொருளை உமார் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஏதோ ஒரு உணர்ச்சியில், அந்தக் குழாயையும் தாளையும், தன்னுடைய தோற்பைக்குள்ளே வைத்துக் கொண்டான் உமார். எங்கோபோய்க் கொண்டிருந்த தன்னைப்பற்றிய செய்தியைத் தன்னிடமே அந்தப் பருந்து கொண்டுவந்து சேர்த்தது நூற்றில் ஒரு நிகழ்ச்சியாகவே பட்டது. அதை எண்ணி அவன் யப்படையவில்லை. ஆனால் அதன் கருத்தை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தான்!

உ.க. 17