பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260


நிசாம் அவர்களுடைய புதிய சாம்ராஜ்யத்திலே இடமில்லை. அப்படியானால், போரிட்டுக் கொள்ளையடித்தே வாழ்க்கை நடத்தும் ஆயிரக் கணக்கான துருக்கியப் படைத்தலைவர்களுக்கும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட போர் யானைகளுக்கும் வழி என்ன?

“ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைத் தாங்கள் சேனாபலத்தின் உதவியால் உண்டாக்கி விட்டீர்கள். ஆனால், அந்த சாம்ராஜ்யத்தை நிலைக்கவைத்துக் காப்பாற்றுவ்தற்கு, இன்னும் பெரிய சேனை தேவைப்படுகிறது. அந்தப் புதிய சேனைக்குத் தீனிபோடப் புதிய புதிய நாடுகளைப் பிடிக்கவேண்டியிருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் இதன் முடிவுதான் என்ன?”

உமார் இந்தக் கேள்வியைக் கேட்டதும் நிசாம் அவனைத் திடுமென்று நிமிர்ந்து பார்த்தார். தன்னுடைய வான்நிலை ஆராய்ச்சியையும், எப்பொழுதாவது, எவளாவது ஒரு பெண்ணையும் திராட்சை மதுவையும் தவிர வேறு எதையும்பற்றி உமார் சிந்திப்பதில்லை என்று நிசாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தார். உமாரும், மாலிக் ஷாவும் ஒத்து வருகிறவரையிலே நிசாமின் திட்டங்கள் எந்தவிதமான இடையூறுமின்றி நடக்கமுடியும். ஆனால் மாலிக் ஷா, போர்க்களத்திலிருந்து கொரசானுக்குத் திரும்பி வந்தால் அவர் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்தத் தொடங்கிவிடுவார். அப்படி நேர்ந்தால் நிசாமின் அதிகாரம் குறைய நேர்ந்துவிடும். ஆகவேதான், அவர் அந்த சாம்ராஜ்யத்தின் நிர்வாகப் பொறுப்பு என்றென்றும் தன்கையிலேயே இருக்க வேண்டுமென்றும், சுல்தான் மாலிக்ஷா தொடர்ந்து படையெடுப்பு நடத்திக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். அவ்வாறே தன் விருப்பப்படியே நடக்கவேண்டும் என்றும், அவ்வாறு நடக்குமென்றே ஆண்டவன் விதித்திருப்பதாகவும் அவர் உறுதியாக நம்பினார்.

“சுல்தான் அவர்கள் இந்தப் படையெடுப்புகளை நடத்த வேண்டுமென்பதும் நாம் இந்த நாடுகளை ஆளவேண்டு மென்பதும் ஆண்டவனுடைய திருவுள்ளப்படி நிச்சயிக்கப் பட்ட கட்டளையாகும்” என்று நிசாம் கூறினார்.