பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

அனுப்பப்படுவதற்கு முன்னால், நான் யாரிடமும் அதைப்பற்றிக் கூறவில்லை” என்று உமார் கூறினான்.

“இருக்கமுடியாது காசர் குச்சிக்கிலிருந்து இங்கு கடிதம் கொண்டு வந்த குதிரை வீரன் இங்குவந்து சேர எட்டுநாள் ஆயிற்று. ஆனால் அவன் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னாலேயே ஹாசானுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது”.

யாரேனும், ஒவ்வோர் இடத்திலும் வேறுவேறு குதிரைகளைப் புதிது புதிதாக மாற்றிக்கொண்டு வெகு வேகமாக வந்தால் கூட நான்கு நாட்களில் அவ்வளவுதூரம் வருவ தென்பது முடியாத காரியம். தான் செய்தியனுப்பிய ஆள் ரே நகரம் வந்து சேருவதற்கு முன்னாலே அந்நகரிலேயுள்ள யாருக்கும் தன்னுடைய செய்தியைப்பற்றித் தெரிந்துவிடும் என்று நினைக்கவே முடியாது. தன்னுடைய செய்தி காற்றிலே பறந்து வந்திருந்தால் ஒழிய, அது அவ்வளவு சீக்கிரம் இங்கே தெரியும் என்பதில் பொருள் இல்லை. உமார் தன் இடுப்பில் இருந்த வெள்ளிக் குழாயை நினைத்துக் கொண்டான். இந்தக் குழாயை ஒரு புறா கொண்டு வந்திருக்கிறது. அது போலவே, தான் நிசாமுக்கு அனுப்பிய செய்தியை ஒரு புறாதான், நான்கே நாட்களில் காசர்கச்சிக்கிலிருந்து ரே நகருக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

அப்படியானால் யாரோ தன்னுடைய வீட்டிலே தன்னை உளவு பார்த்திருக்கிறார்கள். உளவறிந்து இரண்டு முறையும் ரே நகருக்குச் செய்தியனுப்பி யிருக்கிறார்கள். அயீஷா வாக இருக்குமா? அல்லது இஷாக்கா? அவர்கள் இரண்டு பேருமே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று சொல்லியிருக்கிறார்களே!

“இவ்வளவு தூரத்தை முன்றே நாட்களில் ஒரு புறா கடந்து வர முடியும்!” என்று உமார் கூறினான்.

உமார் எதைப்பற்றிக் கூறுகிறான் என்பதைக் கவனித்துணராத நிசாம், தன் திட்டத்திலேயே குறியாக, “அப்படியானால், உமார்! இப்பொழுதே சுல்தானுக்கு எழுது. போரை நிறுத்திவிட்டு வந்தால் ஆபத்து நேரிடும் என்று உடனே எழுதிக்கொடு. சாமர்கண்டிற்கு, ஒரு புறாவின் மூலம் இந்தச் செய்தியை அனுப்புவோம்.”